(UTV|COLOMBO) – கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும் என அழுத்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம் இஸ்மாயிலின் அழைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சம்மாந்துறை விளினையடி சந்தி அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை(20) இரவு 10.30 மணியளவில் அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“..நாங்கள் எதிர்நோக்க இருக்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தலானது முக்கியமான இரு வேட்பாளர்களான புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகிய இருவரில் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் இனவாதங்களை களையெடுக்கக்கூடிய குறிப்பாக முஸ்லிம் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வேட்பாளரான சஜித் பிரேமதாசவையே ஆதரிக்க வேண்டும். இங்கு நாம் நம்முடைய முஸ்லிம் பிரதிநிதிகளிடம் காணப்படுகின்ற வெறுப்புக்களை மறந்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காய் ஒன்று திரள வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம் சமூகம் அச்சத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும். இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்.
இன்று பணத்திற்காகவும் பயத்தினாலும் பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கின்ற நிலையைக் காணலாம். கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து என்மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி, என்னையும் அந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தி இந்த பேரினவாத சக்திகள் என் மீது அபாண்டமாக பழி சுமத்தி என்னை கைது செய்யுமாறு கோரியது. இதனையடுத்து என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் போலியானவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எங்களுடைய சமுதாயத்திற்காக எங்கள் தலைகளையும் அர்ப்பணம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் .
மேலும் ஜனாதிபதியை தெரிவு செய்யுமாறு தன்னை கூறும் வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் மக்களது வாக்குகளை வீணாக்கி பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெறச்செய்யும் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி நாம் ஒரு போதும் ஏமாந்து விடக்கூடாது
அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எப்போதோ பேசிய காணொளியை இப்போது வெளியிட்டு இந்த அநாகரிகமான செயலை செய்தமையானது எங்களது கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினை வருவதற்கும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இங்கு சமுதாயத்தை பாதுகாப்பதற்காக எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் இது பாராளுமன்ற தேர்தலோ மாகாண சபைத் தேர்தலோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ அல்ல. மாறாக இது நாட்டின் தலைமையை தீர்மானிக்கும் தேர்தல் ஆகவே மக்களாகிய நீங்கள் தான் எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கு ஏற்ற நாட்டின் தலைமையான சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்