(UTV|COLOMBO) – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த நடவடிக்கையை எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், திட்டமிட்டபடி பிரிட்டன் எதிர்வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் குறித்த திகதிக்கு முன்பாகவே கூட பிரிட்டன் வெளியேறலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்மொழிவின் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒப்பந்தம் இன்றியோ அல்லது ஒப்பந்தத்துடனோ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எதிர்வரும் 31 ஆம் திகதி விலகும் என போரிஸ் ஜோன்சன் ஏற்கனவே உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.