Trending News

சிறுபான்மை மக்களின் 90% வாக்குகள் சஜித்துக்கு – ரிஷாட்

(UTV|COLOMBO) – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தினால் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமாதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பி.ஹரிசன், சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், ஜெயதிலக, நியாஸ் மற்றும் ஐ.தே.க முக்கியஸ்தர்களான கருணாதாஸ, திருமதி. டயானா கமகே, முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,

“அராஜக ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கில், இனவாதக் கூட்டம் ஒன்று திட்டமிட்டு செயற்படுகின்றது. சிங்கள பிரதேசங்களில் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் சிறுபான்மைத் தலைமைகள் தொடர்பிலும் முரண்பாடான, திரிவுபடுத்தப்பட்ட வதந்திகளையும் செய்திகளையும் பரப்பி, பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை மூவின மக்களும் அதாவது, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்றனர். அந்த மக்களின் பிரதிநிதிகளும் தலைமைகளும் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். “இன ஒற்றுமையையும் மத ஒற்றுமையையும் ஏற்படுத்தி, இந்த நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவமாகவும் சமாதானமாகவும் வாழச் செய்வேன்” என இதயசுத்தியுடன் பகிரங்கமாக கூறிவரும் சஜித் பிரேமதாசவை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் சிறுபான்மை தலைமைகள் அனைத்தும் அவருடன் இணைந்து செயற்படுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில், சிறுபான்மை மக்களின் 90 % சதவீதமான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றேன். இறைவனைத் தவிர, வேறு எந்த சக்திகளாலும் இதனைத் தடுக்க முடியாது.

சஜித் பிரேமதாசவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த பல்வேறு உபாயங்களும் யுக்திகளும் கையாளப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக, கொழும்பிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கூட்டம், இந்தப் பிரதேசத்துக்கு வந்து, முஸ்லிம் தலைமைகளைப் பற்றி இல்லாதபொல்லாத விடயங்களைக் கூறி, சஜித்தின் வாக்குகளை உடைக்கப் பார்க்கின்றது. அதேபோன்று, முஸ்லிம் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு வேட்பாளருடன் இன்னொரு கூட்டம் இணைந்து, முஸ்லிம் வாக்குகளை சஜித்துக்கு போகவிடாமல் புறம்பாக்கப் பார்க்கின்றது. அதுமாத்திரமின்றி, தமிழ் மக்களின் வாக்குகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கில், தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரி, ஒரு கூட்டம் செயற்படுகின்றது. இன்னுமொரு சாரார் மூன்றாம் அணிக்கு வாக்களிக்க வேண்டுமென்ற ஒரு கோஷத்தை முன்னெடுக்கின்றனர்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில், பட்ட கஷ்டங்கள் சொல்லொனாதவை. நமக்கு மட்டுமே அது தெரியும். யுத்தத்தால் அகதிகளானோம். சிதறடிக்கப்பட்டோம். வாழ்விழந்தோம். துயரங்களை சந்தித்தோம். எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டனர். அந்த உறவுகளைத் தேடி தாய்மார்கள் கண்ணீருடன் இன்னும் அலைந்து திரிகின்றனர். சிற்சில தவறுகளுக்காக இன்னும் பலர் “அரசியல் கைதிகள்” என்ற போர்வையில், சிறையில் வாடுகின்றனர். இவ்வாறான துன்பங்களுக்கு மத்தியில் வாழும் நமது மக்களுக்கு, இனி மேலாவது நிம்மதி கிடைக்க வேண்டும். அதற்காக சஜித் பிரேமதாசவை நாட்டுத் தலைவாரக்குவோம்” என்றார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ! (பட்டியல் இணைப்பு)

Mohamed Dilsad

US commends Lanka Army for its contribution to ongoing reconciliation efforts

Mohamed Dilsad

The tenure of Presidential Commission to inquire into allegations on SriLankan Airlines & Mihin Lanka extended

Mohamed Dilsad

Leave a Comment