Trending News

வரலாற்றுக் கடமைகளிலிருந்து வழிவிலகிய யதார்த்தம்

(UTV|COLOMBO) – காலவோட்டத்திற்கேற்ப தேர்தல் களத்தை எவ்வாறு நகர்த்துவதென்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீனுடன் கடந்த வாரம் சென்ற களப் பயணங்கள் சமூக உணர்வுகளை உரசிச்சென்றது. வடக்கின் தொடுவாயிலிருந்து ஆரம்பித்த எமது பயணம் தென்னிலங்கையின் மூலை முடுக்குகளையும் ஆழ ஊடுருவி நோக்கியதால், கள யதார்த்தங்களை கணிப்பிட இயலுமாயிற்று.இந்தக் கணிப்பீடு வெற்றி தோல்வி பற்றியதல்ல.முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்குள் ஊடுருவியுள்ள அச்சம் கலந்த ஆதங்கம், அடிப்படைவாதத்தின் அசல்,நகல் பற்றிய தௌிவுகளில் எமது சமூகத்தின் கணிப்பீடுகளை இக்கள விஜயத்தில் காண முடிந்தது.

ராஜபக்ஷக்களின் தென்னிலங்கை எழுச்சிக்குள் இயைந்து செல்வதா? அல்லது சிறுபான்மை உணர்வுகளுடன் ஒன்றித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா? என்ற கலக்கம்,மயக்கங்களில் எமது மக்கள் இருக்கின்றனர். நள்ளிரவையும் தாண்டி அதிகாலை இரண்டு மணி, மூன்று மணி வரை எமது வருகைக்காக வீதிகளில் காத்து நின்ற தென்னிலங்கை முஸ்லிம்களின் மனங்கள்,மக்கள் காங்கிரஸ் தலைமையை தைரிய மூட்டியது.மட்டுமல்ல “தருணம் தப்பினால் தலையிலடி” என்ற பதற்றத்தில் உறைந்திருந்த குருநாகல் உள்ளிட்ட தென்னிலங்கையின் நீண்ட பரப்பிலுள்ள முஸ்லிம்களுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வழிகாட்டல்கள் நிம்மதியளிப்பதாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம் சமூகத்தலைமைகள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒற்றுமைதான் பலம் சேர்க்கும் என்ற நியதியில் பெருந்தேசியத்துக்குள் ஒளிந்துள்ள முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாடுகள் கவலையளிப்பதையும் அம்மக்களின் விரக்தி உணர்வுகளில் நான் கண்டு கொண்டேன். ராஜபக்‌ஷக் களின் விசுவாசிகளாவதற்காகவே இவர்களில் சிலர் முஸ்லிம் சமூகத்தின் அபிமானிகளாகத் தங்களைச் சுயம்வரம் சூடிகொண்டனர்.நல்லாட்சியிலும் சரி, கடந்தகால பொல்லாத ஆட்சியிலும் சரி முஸ்லிம்களுக் கு எதிராக அவிழ்க்கப்பட்ட அத்தனை அட்டூழியங்களை யும் தடுப்பதற்கான பாதுகாப்பு அரணாகச் செயற்பட்டது யார்?ராஜபக்ஷக்களுக்காக குரல் கொடுக்கும் ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியும்,முன்னாள் அமைச்சர்களும் அப்போது எங்கிருந்தனர்/ ?இதுதான் இவர்களின் மனச்சாட்சிகளைத் துளைத்தெடுக்கின்றன.இது மாத்திரமல்ல நட்ட நடுநிசியிலும் காரிருளிலும் விழிகள் திறந்து கிடக்கும் கடும் போக்கர்களின் களங்களைத் தாண்டி சமூகத்துக்குள் ஊடுருவிப்பணிபுரிந்த அங்கீகரிக்கப்பட்ட சமூகத் தலைமைகள் இன்றுவரைக்கும் ஓயாது உழைக்கின்ற உணர்வும் ஓர்மையும் சமூகத்திரட்சியில் ஒருங்கிணைந்து கடும்போக்கர்களின் கடைசிச் சந்தர்ப்பத்தை தோற்கடிப்பதற்காகவே.இந்தத் தேர்தலின் தோல்வி பௌத்த கடும்போக்கர்களின் செருக்குத்தனத்தையும் ஏனைய மதத்தினர் மீதான கேலித்தனத்தையும் வாழ்விழக்கச் செய்யும்.மாறாக இவர்களின் வெற்றி தென்னிலங்கை முஸ்லிம் சமூகங்களின் சுதந்திர இருப்புக்கு அடிமைச்சாசனம் எழுதி,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் இருப்புக்களை பெரும்பான்மை இருப்புக்குள் விழுங்கிவிடும்.இந்த யதார்த்தத்தின் எதிரொலிகளே முழு முஸ்லிம் பரப்பிலும் பட்டுத் தெறிக்கின்றன.

சமூகத்தின் எந்த வீடுகளைத் தட்டினாலும்,எந்த வாசல்களுக்குச் சென்றாலும் ராஜபக்‌ஷ யுகங்களின் கொடுங்கோல் வடுக்கள் வீரவரலாறுகளாகப் பதியப்பட்டுள்ளதையே என்னால் காணமுடிந்தது. அப்படியென்ன கொடுமை,கொடுங்கோல் அந்த யுகத்தில் என்றும் சிலர் நினைப்பதுண்டு.எந்தச் சொத்துக்களுக்கும் ஈடாகாத,எதற்கும் விலைபோகாத முஸ்லிம்களின் மத உணர்வுகள்,நம்பிக்கைகளில் ஏற்படுத்தப்பட்ட காயங்களே அவை.புலிகளின் வீழ்ச்சியில் முஸ்லிம் சமூகம் நிம்மதியடைந்தமை உண்மை,கிழக்கின் விடுவிப்பில் முஸ்லிம்களின் காணிகள் மீளக்கிடைத்தமை உண்மை, வடக்கில் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்ந்தமை உண்மை இதற்கான நன்றிக் கடன்கள் ராஜபக்‌ஷக்களுக்குரியதுதானே என்ற கேள்விகளும் நியாயத்திலிருந்துதான் பிறக்கின்றன.ஆனால் இவற்றை சரிப்படுத்திய நியதிக்குள் 2013 இல் ஆரம்பான கெடுபிடிகள் உள்வா ங்கப்பட்டுவிட்டதே.நல்லாட்சியிலும் இதே சாயலுடன் கெடுபிடிகள் நடக்கவில்லை என்பதற்கில்லை.எனினும் தலைமைகள் தப்புச் செய்யாதென்ற நம்பிக்கை இம்மக்களை வழிநடத்துகிறதென்பதே உண்மை.

குருநாகல் மாவட்டத்தின் கிராமங்களான கலேகம, தோறக்கொட்டுவ,பானகமுவ, தல்கஸ்பிட்டிய, ஹொரம்பா, திவுரும்பொல, தித்தவெல்கல,சியம்பலாகஸ்கொட்டுவ,மற்றும் கண்டி மாவட்ட மக்களின் மன உணர்வுகளைத் தொட்டுச் சென்ற வாடைகள் வாடுவதற்கிடையில், வடக்கு நோக்கி அமைச்சரின் பரிவாரங்கள் பறந்த வேகத்தில் மரங்கள்,பொந்துகளுக்குள் ஔிந்திருந்த பறவைகளும் தூக்கம் கலைத்து தலைகளை வௌியில் நீட்டின.

உண்மையில் புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் நிலவும் அரசியல் சூழல் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானதுதான்.இதற்கு வித்திட்ட ராஜபக்‌ஷக்களுக்கு இப்பிரதேச மக்கள் விசுவாசத்தை வௌிப்படுத்த வேண்டியது வரலாற்றுக் கடமைதான் . ஆனால் தென்னிலங்கையிலுள்ள தமது சகோதரர்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமானால் ராஜபக்‌ஷக்களை நிராகரிக்கும் தவிர்க்க முடியாத வரலாற்றுப் பொறுப்புக் குள் வடக்கு,கிழக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகின்றனர்.

அடிப்படைவாத்தின் ஊற்றுக்களைத் துடைத்தெறிந்தால் ஏனைய கட்சிகளிலுள்ள இனவாதிகளையும் தோற்கடித்து விடலாம் என்பதற்கான தெரிவையே தனித்துவ தலைமைகள் தேர்ந்தெடுத்துள்ளன.இந்தத் தெரிவில் எத்தனை முஸ்லிம்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்பதை எதிர்வரும் தேர்தல் நிரூபிக்கப் போகிறதென்பதே உண்மை.எனினும் வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் தியாக உணர்வை தென்னிலங்கை முஸ்லிம் சமூகம் உணர வேண்டிய கடப்பாடுகளுக்கும் திணிக்கப்படுகின்றனர்.கிழக்கில் தனி நிர்வாக அலகு, அம்பாரை கரையோர மாவட்டக்கோரிக்கைகளை பிரிவினைவாதமாகக் கருதி கிழக்கு முஸ்லிம்களுடன் உடன்படாதிருப்பதை தவிர்த்துக் கொள்வதே அது. இதைப்பிரிவினைவாதமாக காட்டும் ராஜபக்‌ஷக்களை தோற்கடித்து விட்டால் தென்னிலங்கை முஸ்லிம்களும் தௌிவு பெற வேண்டும்.

-சுஐப்.எம்.காசிம்-

Related posts

President discusses issues of Lankan Troops serving in UN Peace Keeping Forces

Mohamed Dilsad

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

ACMC warns organised vote buying planned against Sajith Premadasa

Mohamed Dilsad

Leave a Comment