(UTV|COLOMBO) – கடந்த 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இரு பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக சில இணைய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
யாழ் – கோட்டை பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அந்த பிரதேசத்திற்கான வீதி பாதுகாப்பு, உயர்ந்த கட்டட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் என்பவற்றுக்காக இரு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் டீ.டி.ஆர்.தசநாயக்க மற்றும் யாழ் பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரஷாந் பெர்னான்டோ ஆகியோரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிரசாரக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறித்த வேட்பாளர் இந்த பொலிஸ் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது , அதனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்திருந்த நபர் புகைப்படம் எடுத்து ‘ பொலிஸ் அதிகாரிகள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் ‘ என்று பொய்யான செய்தியை பரப்பியுள்ளார்.
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு பரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.