(UTV|COLOMBO) – முஸ்லிம் தலைமைகள் கொள்கை வேறுபாடு மற்றும் கருத்தியல் ரீதியான இடைவெளிகளை கொண்டுள்ள போதும் சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியாவில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை எப்படியாவது கபளீகரம் செய்யவேண்டுமென்று அந்த சமூகத்திற்கு எதிராக கொள்கைகளை கொண்டவர்களும் கடந்த காலங்களில் இந்த மக்களை நெருக்குவார படுத்தியவர்களும் அச்சுறுத்தியவர்களும் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.இந்த இனவாத கட்சிகளின் ஏஜெண்டுகளும் கொந்தராத்துக் காரர்களும் சிறுபான்மை மக்களின் பிரதேசங்களுக்கு சென்று வீடு வீடாக தெரிகின்றனர்.ஆதரவாக பேசியும் சில சந்தர்ப்பங்களிலும் அச்சுறுத்தல் பாணியிலும் இவர்கள் வாக்கு கேட் கின்றனர்.
ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று அச்சடித்து கொண்ட ஒருவர்,முஸ்லிம் வாக்குகளை எப்படியாவது சிதறடித்து தனக்கு விருப்பமான வேட்பாளரை வெல்லசெய்யவேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் தான் போட்டி நிகழ்கின்றது இனவாதிகளுடன் ஒருவர் நிற்கின்றார் பல்வேறு சமூகங்களை பிரநிதித்துவப்படுத்துகின்ற தலைமைகளும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அடுத்த வேட்பாளருடன் நிற்கின்றனர்.பத்து வருடங்களாக முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியை தொலைத்தவர்கள்,நிம்மதியாக வாழவிடாதவர்கள் மார்க்க கடமைகளை சுமுகமாக பின்பற்ற தடையாக இருந்தவர்கள் ஆகியோருடன் இணைந்துள்ள வேட்பாளர்களுக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும். பணத்தை காட்டி,பதவியை காட்டி,இனிப்பான கதைகளை கூறி இவர்கள் முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்த பார்க்கின்றனர்.
நமது சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் சிலரும் இவர்களிடம் சோரம்போய் இருப்பதுதான் வேதனையானது சிங்கள பிரதேசங்களில் அப்பட்டமான இனவாதத்தையும்,துவேசத்தையும் விதைப்பவர்கள் சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களுக்கு வந்து இன ஐக்கியத்தை போதிக்கின்றார்கள் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு-