(UTV|COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு இன்று(05) சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்மாநாட்டில் சுதந்திர கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படும். சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பிரதான நோக்கமாக இழக்கப்பட்டுள்ள அரச அந்தஸ்த்தினை மீண்டும் எவ்வாறு கைப்பற்றுவது என்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்தும் இன்று கூடவுள்ள சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.