Trending News

சமூகத்தின் சுய மரியாதையை பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் -றிஷாட்

(UTVNEWS | COLOMBO) – முஸ்லிம் இளைஞர்கள் நமது சமூகத்தினது சுய மரியாதையையும்  கெளரவத்தினையும் பாதுகாக்க  முன்வர வேண்டும் என  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு இன்று  புதன்கிழமை (06) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமர் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாசாவை ஏன்  ஆதரிக்கின்றது என்றும்  இந்நிகழ்விற்கு பிரதமரை ஏன்  பிரதம அதிதியாக அழைத்திருக்கின்றது  என்பதும் உங்களில் பலருக்கு விடைதேடும் வினாவாக இருக்கலாம்.

இந்த நாட்டில் இளைஞர்கள் தைரியமுள்ளவர்களாக, முதுகெலும்புள்ளவர்களாக, நேர்மையானவர்களாக, தவறான வழியில் செல்லாதவர்களாக, மார்க்க பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தமது  எதிர்காலத்தை வளமுள்ளதாக்குவதற்கு எந்த தலைமைக்கு பின்னால் அணிதிரள வேண்டும் என முடிவு எடுக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது.

முஸ்லிம் சமூகம் இந்த்நாட்டில் 1200 வருடங்களுக்கு மேலாக மிக பொறுமையாக ஏனைய சமூகங்களுடன் வாழ்ந்து வருகின்றது.   முஸ்லிம்கள் இந்த நாட்டின்
சமாதானத்திற்காக அரும் பாடுபட்டுள்ளார்கள். இன்றும் அதற்காக உழைக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் பயங்கரவாத த்திற்கோ, தனி இராஜ்ஜியம் கேட்டோ ஆயுதம் ஏந்தியோ இந்த நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கவில்லை.

தமிழர்கள் அன்று விடுதலை வேண்டி ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் மறைந்த தலைவர்
அஷ்ரஃப் இந்த சமூகத்தின் இளைஞர்களை ஆயுதம் ஏந்த கூடாது, தீவிரவாத  இயக்கங்களில் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு
ஐனநாயக வழிகள் மூலம் தீர்வை பெற்று கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார்.

கடந்த ஏப்ரல் 21க்கு  பின்னர் மறைந்த தலைவர்
அஷ்ரஃப்பைக் கூட இந்த இனவாதிகள் இம்சித்துப் பேசினார்கள். இஸ்லாம் மார்க்கம் பயங்கரவாதத்தின்  மூலம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என வழிகாட்ட வில்லை. இந்த நாட்டில் எந்த கட்சியிலும் இருந்த  முஸ்லிம் தலைமைகள், அரசியல்வாதிகள் பயங்கரவாதத்திற்கோ அல்லது நாட்டை துண்டாடுவதற்கோ துணை நின்றதாக வரலாறுகள் இல்லை. இலங்கை அரசாங்கங்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒரு்பொழுதும் செயற்படவுமில்லை.

கடந்த ஏப்ரல்  21 இல் ஸஹ்ரானின்  கூலிப்படை செய்த நாசகார வேலையின் காரணமாக முஸ்லிம் சமூகம்  அதன் சமூக, சமய, அரசியல் தலைமைகள் பல வழிகளிலும் இம்சைக்குட்படுத்தப்பட்டனர். ஸஹ்ரானின் அந்த கேவலமான நாசகார தாக்குதலை  நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நாம் அன்று
கட்சி பேதங்களை மறந்து சமூகத்தின் இருப்புக்கும்  பாதுகாப்புக்கும் இளைஞர்களாகிய உங்களுக்கும் வழிகாட்டு முகமாக ஒன்றுபட்டு பதவிகளை துறந்து ஏற்படவிருந்த பாரிய தாக்குதலை தவிர்த்திருந்தோம்.

முஸ்லிம் சமூகம் ஸஹ்றானின் நாசவேலையை  கண்டித்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கியதோடு அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குமாறு அரசாங்கத்தை வேண்டியது அவர்களினது ஜனாசாக்கள் கூட முஸ்லிம்களின் மையவாடிகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

சாய்ந்தமருதூர் மக்கள் அந்த பயங்கரவாத கும்பலை பூண்டோடு அழிக்க இராணுவத்திற்கு உதவியமையானது முஸ்லிம்கள் இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பானவர்கள் என்பதை நிரூபித்திருந்தது. இந்த ஸஹ்ரானின் தாக்குதலோடு நயவஞ்சகர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக
இனவாதத்தை தூண்டினார்கள்.
எமது பள்ளி வாசல்களை உடைத்த இனவாதிகளை தண்டிக்காத  இந்த இனவாதக்கூட்டம் அந்த நாசகார சம்பவத்தோடு
என்னை சம்மந்தப்படுத்தினார்கள்.
பல குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தியதோடு மட்டுமல்லாமல் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டுவந்து இந்த சமூகத்தின் குரலை பாராளுமன்றத்திலிருந்தும் அரசியலில் இருந்தும்  தூரப்படுத்துவதற்கு  எடுத்த நடவடிக்கை அல்லாஹ்வின் உதவியால் தவிடுபொடியானது.

என்மீது சுமார் 300 பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். ஆனால் புலனாய்வுப்பிரிவினரின் விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்ப்பிக்கப்பட்டு என்னை நிரபராதி என அறிவித்தார்கள். அநியாயமாக டாக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தி மருத்துவ துறைக்கே  இந்த இனவாதக்கும்பல் அவமானத்தை தேடிக்கொடுத்து.
கத்தோலிக்கரான அமைச்சர்  ரவி கருணாநாயக்க உட்பட இந்த நாட்டின்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து என்னை
குற்றவாளியல்ல என அறிவித்தனர் . அந்த நம்பிக்கைக்கு கெளரவமளிப்பதற்காகத்தான் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அவரை நாம் அழைத்து வந்துள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்க அரசியலில்  40 வருடகாலம் அனுபவம் கொண்டவர்.  நமது சமூகத்தை பற்றி நன்கு உணர்ந்தவர். எம் சமூகத்திற்கு
நிறைய பிரச்சினைகள் உள்ளன. காணிப் பிரச்சினைகள், துறைமுக பிரச்சினைகள், மீனவர் மற்றும்  விவசாயிகளின் பிரச்சினைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு விரைவில் கிடைக்க இந்த தேர்தலில் சஜித் பிரமேதாசவினை வெற்றி பெற செய்ய வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் அரச வீட்டு திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அரச காணிகள் இல்லை.
நிலத்துக்காக தமிழர்கள்  அன்று போராடினார்கள். இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினை தீர்க்கப்படும். வாழ்க்கை தரம், கல்வி, சுகாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காக 10 வருட திட்டம் தயாரிக்கப்பட்டு வீடுகள் அற்ற அனைவருக்கும் வீடுகள் பெற்றுதரப்படும்.

இளைஞர்களாகிய நீங்கள் உமது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் உயர்ந்து செல்ல வேண்டும். மார்க்க விடயங்களில் பற்றும் விட்டுகொடுப்பின்மையும் வளரவேண்டும். நாட்டுப்பற்றாளர்களாகவும்  ஏனைய சமூகங்களை உபசரிப்பவர்களாகவும் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்.

இந்த நாட்டிற்கு நாங்கள்
வர்த்தகர்களாகவே  வந்தோம். நாங்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து காட்ட வேண்டும். எம் சமூகத்தினர் மத்தியில் ஒற்றுமை இல்லை. அதனால் தான் 50 க்கு மேற்பட்ட இஸ்லாமிய  நாடுகளில் யுத்தங்கள்,  வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த தேர்தல் எம் சமூகத்திற்கு சாதாரணதொரு தேர்தல் அல்ல. இளைஞர்களாகிய நீங்கள் நீதிக்கு வாக்களிப்பதா அல்லது அநீதிக்கு வாக்களிப்பதா என்பதை சிந்தித்து நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியான இருப்புக்காகவும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு மிகச்சிறந்த ஜனநாயகவாதியாவார். திகன, கண்டி, மினுவாங்கொட, குளியாப்பிட்டி போன்ற இடங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் சூத்திரதாரிகள் பிரதமர் ரணிலின் ஆட்சியில்  கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் ஞானசாரதேரரை அன்று கைது செய்யாமல் பாதுகாத்த  கோதபாய ராஜபக்‌ஷ இன்று இந்த சமூகத்தின் வாக்குகளை சிதறடிக்கச் செய்து ஆட்சியினை கைப்பற்றப்பார்க்கிறார். எனவே இளைஞர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை பறைசாற்றவும் சமூகத்தின் தன்மானத்தையும் சுய கெளரவத்தினையும் பாதுகாக்கவும் எதிர்வரும் 16ம் திகதி அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து நமது ஒற்றுமையை பறைசாற்றுவோம் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டதோடு அமைச்சர் ரவி கருணாயக்க, முன்னாள் ஆளுனர்களான ஆசாத் சாலி மற்றும் றோகித போகல்லாகம , பிரதி அமைச்சர்  அப்துல்லாஹ் மஹ்றூப், பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.எம்.எம்.இஸ்மாயில், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.எம். முஸர்ரஃப் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Pakistan awards Scholarships to Sri Lankan students – [IMAGES]

Mohamed Dilsad

33 ஆயிரம் லீட்டர் பெற்றோல் ஏற்றி வந்த பவுசர் விபத்து-(படங்கள்)

Mohamed Dilsad

Leave a Comment