(UTV|COLOMBO) – ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது பழங்காலப் பழமொழி. அதாவது நாம் செய்யும் எந்தவொரு வேலையாக இருப்பினும் அதற்கென முதலில் எம்மிடம் ஒரு உற்சாகம் இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு திரைக்கு பின்னால் உள்ள ஓவியனின் கதையே இது..
ஆம், ‘அப்ஸன்’ இறக்காமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவனுக்கும் ஆயிரம் கனவுகள்.
சிறு வயது முதல் வேலைகளில் சுட்டியாக இருந்தது போலவே கல்வித் திறமையிலும் சுட்டியாகவே இருந்துள்ளான். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு பின்னர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவிற்காக சித்தியெய்தி கலைத்துறையில் கால் தடம் வைத்தான் அப்ஸன்.
கலைத்துறையில் தன்னால் சாதிக்க முடிந்த முதல் படியாக அவனின் உற்சாகம் ஓவியத்தினை நோக்கி நகர்ந்தது. கண்ணில் காண்பவை எல்லாம் மந்திரம் போல் அவனது கைகளும் கிறுக்கத் தொடங்கின.
எவரதும் ஆலோசனைகளோ வழிகாட்டல்களோ இன்றி தனது ஓவியக்கலையினை தனியாளாய் நின்று வளர்த்து வந்தான். அவனுக்கு ஓவியக் கலையின் பெறுமதி என்பது சுத்தமாகவே புரியவில்லை.. தெரியவுமில்லை.. என்பதே உண்மை.. அவனுக்கு வழிகாட்டவும் எவரும் இருக்கவில்லை.
‘உன்னால் முடியும்’ என்ற வேதவாக்கினை கருத்திற் கொண்டு Youtube மூலம் மேலதிக ஓவியக் கலையான பென்சில் ஸ்கெட்ச் மற்றும் 3D சுவர் ஓவியங்களையும் வரைய தனி முயற்சியால் பயின்றான். அவனது திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், அவை அவனுக்கு வயிறு நிரப்பவில்லை என்பது தான் கசப்பான உண்மை.
ஒருவனால் ஒரு உருவத்தினை பார்த்து அச்சு அசலாக பென்சில் ஸ்கெட்ச் போடுவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அதற்கென அவனுள் ஒரு விசேட கலையினை இறைவன் செதுக்கியுள்ளான்.
அவனும் முயற்சியினை விடவில்லை தொடர்ந்தும் முயன்றான்.. ஒருகணம் அவனே சோர்ந்து விட்டான்.. அவ்வப்போது யாராவது தோழமைகள் கோரினால் ஏதும் விசேட நிகழ்வுகளை ஞாபகமாக வரைந்து கொடுக்க வழக்கப்பட்டான். அது தவிர அவனது கலை அவனுள் ஒரு செல்லாக்காசு…
இவ்வாறான படைப்புக்களை வரவேற்க வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் வரிசையில் நிற்க நமக்கு களமின்றி எமது திறமைகளும் ஆளுமைகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறான திறமைகளை விற்பதற்கு படைப்பாக்கி விற்பதற்கு இந்தத் தொழில்நுட்ப நூற்றாண்டில் பலவகையான Apps கள் பல உள்ள நிலையில், அது பற்றி போதிய அறிவு இல்லாது இளம் சமுதாயம் பின்னோக்கிச் செல்கின்றது.
அப்ஸான் போன்றோர் ஏன் ஓர் வடிவமைப்பாளராக ஏன் ஒளிரக் கூடாது..? அவனுள் இருக்கும் ஆளுமையினை அவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? இல்லை அவனது முதுகில் தட்டிக்கொடுக்க யாரும் முன்வரவில்லையா..?
இந்தக் குறிப்பினை எழுதும் போது என்னுள் ஆயிரமாயிரம் சிந்தனைகள் ஓடினாலும் தோழா உன்னால் முடியும் என எனது பேனை முனை நிறுத்தக் கோருகிறது.
“முயற்சிகள் தவறலாம் ஆனால்
முயற்சிக்க தவறாதே..”