Trending News

சிறுபான்மை தமிழ் பேசும் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சஜித்தை வெற்றிபெறச் செய்வோம்

(UTV|COLOMBO) – இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அதி கூடிய வாக்குகளால் இந்த பிரதேச மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சனிக்கிழமை மாலை (9) கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பல கட்சிகளை சார்ந்தவர்கள், பல கொள்கை வித்தியாசங்களோடு அரசியல் செய்பவர்கள் அனைவரும் இங்கு ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒரு வேட்பாளரின் வெற்றிக்காக பயணிக்கின்றோம் என்றால் நிச்சயமாக நாங்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவினை இந்த நாட்டின் தலைவராக ஜனாதிபதியாக எதிர்வரும் 16 ம் திகதி மாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளோம் என்பதுதான் பொருளாகும்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு சாதாரண தேர்தலல்ல. சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் நிம்மதியாக சமாதானமாக பிற சமூகங்களுடன் சகோதரத்துவமாக வாழ்வதற்கும், நமது தொழில் மத கடமைகள் என அத்தனை விடயங்களினையும் இயல்பாக செய்வதற்கும் எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குமான தேர்தலாகும்.

இந்த தேர்தலில் எதிர்த் தரப்பினர் சிறுபன்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்றும் சிறுபான்மை தலைமைகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்து கோதபாய ராஜபக்‌ஷவினை ஜனாதிபதியாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். இந்த பேரினவாத சக்திகள் தான் இந்த நாட்டிலே இனவாதத்தை, மதவாதத்தை தோற்றுவித்து இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி சுமார் 1200 வருடங்களாக இந்த நாட்டில் ஒற்றுமையாக, சமாதானமாக, ஜனநாயகத்தை நம்பி வாழ்ந்த நமது சமூகத்தை அநியாயமாக கடந்த 10 வருடங்களாக நமது நிம்மதியை சீர்குலைத்து, நமது இதயங்களில் நிலையூன்றியுள்ள அல்லாஹ்வின் மாளிகைகளை இடித்து, சேதப்படுத்தி, அட்டகாசம் புரிந்து, நமது வர்த்தக நிலையங்களை தீ வைத்து, அத்தனை விடயங்களினையும் அரங்கேற்றியது இந்த கும்பல் தான் என்பது நாடறிந்த உண்மையாகும்.

அந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் ஒரே கூட்டம் தான் இந்த நாசகார செயலை செய்து கொண்டிருக்கின்றது. கடந்த ஏப்ரல் 21 க்கு பிறகு மினுவாங்கொட மற்றும் கெட்டிப்பொல போன்ற பிரதேசங்களில் நமது சகோதரர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. இந்த நாசகார கும்பல் மூன்று வாரங்கள் திட்டமிட்டு இதனை செய்தார்கள். சுமார் 300 காடையர்களை இந்த அரசாங்கம் கைது செய்தது. இதில் 14 பேர் பிரதேச சபை உறுப்பினர்களும் வேட்பாளர்களாகவும் போட்டியிட்டவர்களாகும். இவர்கள் அனைவரும் மொட்டு கட்சியினராகும். இவர்களை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

அம்பாறையில் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டது. கருக்கட்டலை தடைசெய்யும் மாத்திரை பாவித்து கொத்து ரொட்டி விற்பனை செய்வதாக பொய் கூறி அநியாயமாக நமது விற்பனை நிலையங்கள் சேதமாக்கப்பட்டன. இந்த நாசகார வேலைகளை செய்தவர்களை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. கண்டி திகண சம்பவங்களின் போது சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டன. நான் உட்பட அமைச்சர் ஹக்கீம் இரவு பகலாக இதனை தடுக்க முயற்சித்தோம்.

கடந்த அரசில் தம்புள்ளையில் ஆரம்பித்து கிராண்பாஸ் என்று வியாபித்து நோலிமிற், பெஷன்பக் போன்ற வியாபார ஸ்தாபனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சிசிரிவி ஆதாரங்கள் வழங்கப்பட்ட போதும் பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட அரச புலனாய்வு பிரிவினர் கூட இந்த கும்பல்களை கைது செய்ததாகவோ சிறையில் அடைத்ததாகவோ சரித்திரம் இல்லை. இந்த வன்முறைகள் தொடர்பாக பொலிஸில் 60 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் சம்பவத்தோடு தொடர்புபட்ட தேரர் ஒருவரை கைது செய்யுமாறு கேட்டபோதும் பொலிஸார் அவர்களை பொலிஸுக்கும் அழைக்கவில்லை.

பாராளுமன்றத்தில் பேசினோம், அமைச்சரவையில் பேசினோம், நேரடியாக ஜனாதிபதி இடத்திலும் குறிப்பிட்ட அமைச்சர்கள்
இடத்திலும் பேசினோம் ஆனால் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல பயனற்றுப் போய்விட்டன. இந்த இனவாத கும்பல் தான் இந்த நாசகார வேலைகளை செய்தவர்களை உணவூட்டி வளர்த்து அட்டகாசம் புரிவதற்கு வழிசமைத்தவர்கள்.

இந்த ஆட்சியிலும் ஜனாதிபதி ஒருபக்கமாகவும், பிரதமர் ஒரு பக்கமாகவும் இருந்து ஆட்சி இழுத்தடிப்பு செய்யப்பட்டது. ஆனாலும் இந்த அரசு சட்டத்தை கையில் எடுத்த ஞானசாரதேரரை கைது செய்து சிறையில் அடைத்தது ஆனால் யார் அவரை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்தது ஹிஸ்புல்லாஹ். அவரின் சுய இலாபத்திற்காக அன்று அதனை செய்தார். ஆனால் இன்று அவர்(ஞானசார தேரர்) அவருடைய நாசகார வேலையினை ஆரம்பித்துவிட்டார்.

இந்த இனவாத நாசகார சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும். இது ஓர் அழகான நாடு. இந்த நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் 1200 வருடங்களாக நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். சிலர் நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என கூறுகிறார்கள். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தான் அவர் இந்த நாட்டு மக்கள் அனைவரோடும் செய்து கொண்ட ஒப்பந்தமாகும். சஜித் பிரேமதாச தைரியமாக இந்த நாட்டில் சட்டத்தை கையில் எடுப்பவர்களை அவர் ஒரு மதகுருவாக இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைப்பதாக கூறுகிறார். சஜித் பிரேமதாச இந்த நாட்டில் அச்சமில்லாத சூழலை உருவாக்குவதாகவும் அனைவரும் சம மானவர்கள் எனவும் கூறுகிறார்.

தமிழர்களோ முஸ்லிம்களோ இந்த தேர்தலில் ஒரு வாக்கையேனும் வீணாக்கிவிடாதீர்கள். சஜித் பிரேமதாசவினை தோற்கடித்து விடாதீர்கள். நமது இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இந்த பிரதேச தமிழ் முஸ்லிம்கள் 90% மேல் சஜித்தை ஆதரிக்கவேண்டும்.

அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஆசை வார்த்தைகளுக்காக நீங்கள் உங்களது வாக்குகளை பயனற்றதாக்கிவிடாதீர்கள். நகர சபை அல்லது பிரதேச சபை பெற்றுதருவோம் என உங்களிடம் வந்து பொய் வாக்குறுதிகளை விதைப்பார்கள். கல்முனை பிரதேசத்தை இரண்டாகவோ அல்லது மூன்று நான்காவோ பிரிப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் இனரீதியாக பிரதேச செயலாளர் பிரிவுகளை பிரிப்பது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாய் அமையும்.

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது அதனையும் நாங்கள் சஜித் பிரேமதாசவிடம் எடுத்துக் கூறியுள்ளோம். சாய்ந்தமருது பள்ளிவாசல் எங்களை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருது சுயேட்ச்சைக்குழுவின் தேர்தலில் தலையிட வேண்டாம் என கோரியிருந்தனர். அதனை நாங்கள் மதித்தோம் . நாங்கள் இன்றும் கூட பள்ளிவாசல் நிர்வாத்தினரை மதிக்கின்றோம். ஆனால் அண்மையில் இந்த சுயேட்ச்சைக்குழுவினர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மொட்டு கட்சியினை ஆதரிக்க எடுத்த முடிவினையிட்டு கவலையடைகிறோம். இந்த தேர்தல் ஒரு பிரதேச, மாகாண அல்லது பாராளுமன்ற தேர்தலல்ல. இந்த தேர்தல் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமான தேர்தல். உங்கள் பிரதேச பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல. இந்த நாட்டில் வாழ்கின்ற நமது முஸ்லிம் சமூகத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் வட கிழக்கிற்கு வெளியிலே வாழ்கிறார்கள்.

கடந்த அரசாங்கத்தில் நாங்கள் அங்கத்தவர்களாக இருந்தோம் என்பதனால் கூறுகிறோம். இந்த தேர்தலில் உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக இந்த சமூகத்தின் பாதுகாப்பை கொச்சைப்படுத்திவிடாதீர்கள். நாங்கள் இந்த நாட்டில் வாழ முடியாதவாறு மத சுதந்திரம் அற்று பாதுகாப்பின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள். நமது எதிர்காலம், நமது எதிர்கால சந்ததியினரது எதிர்காலம் என்பன இந்த தேர்தலின் முடிவினிலயே தங்கியுள்ளது.

தமிழ் முஸ்லிம் உறவு பாதுகாக்கப்பட வேண்டும். இன ரீதியாக மத ரீதியாக நாம் பிளவு படக்கூடாது. கடந்த 30 வருடங்களாக நாம் அனுபவித்த துன்பங்கள் போதும். உங்களது பிரச்சினை களை தீர்ப்பதற்கு அமைச்சர்களான நானோ ஹக்கிமோ அல்லது சம்பந்தன் ஐயாவோ தேவையில்லை. நீங்கள் இப்பிரதேச மக்கள் உங்கள் பிரதேச புத்திஜீவிகள் மதப்பெரியார்களின் ஒத்துழைப்புடன் உங்கள் பிரச்சினைகளை பேசித்தீருங்கள். நாம் இன்னும் சில காலங்களில் மரணித்து விடுவாம். நமது சந்ததியை நிம்மதியாக வாழ வைப்பதற்கு நாம் பல அர்ப்பணிப்புக்களை செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி, முன்னாள் மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Syria aid convoy retreats amid shelling

Mohamed Dilsad

Sri Lanka PM’s visit seeks to step up cooperative fields

Mohamed Dilsad

President instructs Officials to accelerate Moragahakanda

Mohamed Dilsad

Leave a Comment