(UTV|COLOMBO) – சிறுபான்மை சமூகத்தின் பெரும்பாலானோர் ஒன்று பட்டு, ஓரணியில் இருக்கும்போது,நம்மில் சிலர் எதிரணியில் பயணிக்காமல் சமூகத்தை முன்னிறுத்தி, எதிர்கால விமோசனத்திற்காக சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் புத்தளம் நுரைச்சோலையில் நேற்று மாலை(12) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்..
மக்கள் காங்கிரசின் நுரைச்சோலை அமைப்பாளர் ஹஸீப் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளில் 90சதவீதமானவை ஒன்றுபட்டு சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை நல்கிவருகின்றன. அதேபோன்று கருத்துவேறுபாடுகொண்ட சமூகக்கட்சிகளும் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு சமூக நலனை மையமாக வைத்து செயற்படுகின்றன.எனவே முரண்நிலையில் பயணிக்கும் எஞ்சியுள்ள நமது சமூகம் சார்ந்தவர்களும் சமூக வெற்றிக்காக இணைந்துபயணிக்க முன்வர வேண்டும்..
சுமார் முப்பது வருடங்களாக நாம் பட்டதுபோதும். ஆயுதக்கலாசாரம் நம் நாட்டை குட்டிச்சுவராக்கியது. போர் முடிந்த பின்னர் அமைதிநிலை திரும்பியபோதும் நாட்டிலே மீண்டுமெரு பிரளயம் தோற்றுவிக்கப்பட்டது.சகோதர தமிழ்ச் சமூகம் எல்லாவற்றையும் இழந்து, களைப்படைந்து இருந்ததனால் இன்னுமொரு சிறுபான்மையினரை குறிவைத்து பேரினவாதிகளும், மதவெறி பிடித்தவர்களும் தாக்கினர்..
யுத்தத்தின் கோரத்தில் முஸ்லிம்களும் சிக்குண்டவர்களே. எனினும் தாய்நாட்டை நேசித்த இந்த சமூகத்தின் மீது இனவாதிகளின் வெறிப்பார்வை பாயத்தொடங்கியது .
யுத்தத்தை வென்ற மஹிந்தவின் ஆட்சியில் நிம்மதி கிடைக்குமென நம்பிய நமது சமூகம் மீண்டும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டது. எதிரணி வேட்பாளர் கோட்டாவின் அனுசரணையுடனேயே இனவாதிகள் தலைகால் புரியாமல் நடக்கத்தொடங்கினர்.எனவே இப்போது இவர்கள் கூட்டுச்சேர்ந்துள்ள பொதுஜன பெரமுன அணி வெற்றிபெற்றால் காலாகாலமாக நமது நிம்மதியை தொலைக்கவேண்டியே நேரிடுமென அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நவவி,புத்தளம்மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி,கல்பிட்டி அமைப்பாளர் முஸம்மில்,கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களான பெளசான்,ஆசிக், புத்தளம் பிரதேசபை உறுப்பினர் றிபாஸ் அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லா உட்பட மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு-