(UTV|COLOMBO) – 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியின் கடமைகளை நிறைவுசெய்து கொண்டார். இதன்போது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவரது எதிர்கால நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெற தனது ஆசிர்வாதங்களையும் தெரிவித்தார்.
இதேவேளை அனைவருடனும் இணைந்து தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் தனது பொறுப்புக்களை எதிர்காலத்திலும் நிறைவேற்றுவதற்கு உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை பிரமதர் விடுத்துள்ளார்.
ஜனநாயகத்தை மதிப்பவர் என்ற ரீதியில் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து சாபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுடனும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
கடும் ஆர்வமும் போட்டித் தன்மையும் நிறைந்த தேர்தலின் பின்னர் தாம் மக்கள் தீர்மானத்தை மதித்து, இலங்கையின் 7வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.