(UTV|COLOMBO)- இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொடியின் நிறம், கடும் கபில நிறத்தில் அமைந்துள்ளதுடன் தூய்மையின் சின்னமாக, வெண் தாமரை பொறிக்கப்பட்டுள்ளது. இது, ஆட்சியாளரின் தூய்மையையும் கட்டுப்பாட்டையும் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள அரசமர இலைகள், பௌத்த மதத்தையும் அதற்கு இந்தத் தேசம் வழங்கியுள்ள முன்னுரிமையும் பிரதிபலிக்கிறது.
நெற்கதிர்களும் அவற்றோடு இணைந்து பொறிக்கப்பட்டுள்ள குரக்கன் மலர்களும், செழிப்பை விளக்கிக் காட்டுகின்றன.
ஜனாதிபதியின் கொடியில் காணப்படும் அனைத்துப் பாகங்களும், ஒன்றோடொன்று இணைந்தே காணப்படுவதோடு, அது அனைத்து இன மக்களுக்கிடையிலான இணைப்பையும் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.