Trending News

மக்களாணையை மதித்தே பதவி விலகுகின்றோம் – ரிஷாத் பதியுதீன்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற மக்களாணையை மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று காலை (21) இடம்பெற்ற போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில்,
அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பில் இடமிருந்த போதும், மக்களாணையை மதித்து நாங்களாகவே பதவி விலகுகின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாம் இடையூறாக இருக்க கூடாது என்பதற்காகவே இந்த முடிவை மேற்கொண்டோம். நாங்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை கோருவதாகவும் முயற்சிப்பதாகவும் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறு நாங்கள் எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சியிலேயே இருந்து அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை நல்குவோம்

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் புதிய ஜனாநயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அமோக ஆதரவை நல்கி இருந்தனர். ஜனநாயக நாடொன்றில் எந்தவொரு வேட்பாளருக்கும் எவரும் வாக்களிக்க முடியும். எனினும், தேர்தல் முடிவுகளின் பிறகு சிறுபான்மை மக்கள் தேசத் துரோகம் செய்ததாகவும் பெரும்பான்மை மக்கள் தேசப்பற்றாளாருக்கு வாக்களித்ததாகவும் ஊடகங்களில் மோசமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறுபான்மை மக்களும் பெளத்த மத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வாக்களித்துள்ளனர் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.சிறுபான்மையினர் அவர்களின் இனத்தைச் சேர்ந்த வேட்பாளார்களான ஹிஸ்புல்லாஹ், அலவி, இல்யாஸ், சிவாஜிலிங்கம் போன்றோருக்கு அமோக வாக்களித்திருந்தாலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் கூற முடியும். நாங்களும் சிறந்த ஒரு பெளத்தருக்கே வாக்களித்திருக்கின்றோம். எனவே விமர்சகர்கள் தமது தவறான பார்வையையும், கருத்துக்களையும் திருத்திக் கொள்ள வேண்டும்.

எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாநாயகத்தை என்றுமே மதிக்கின்றது. நாங்கள் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் எதிரானவர்கள். 2005, 2010 ஆம் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமது கட்சி ஆதரவளித்தது. 2015இல் மைத்திரிக்கு ஆதரவளித்தோம், இம்முறை சஜித்திற்கு ஆதரவளித்துள்ளோம். கால சூழ்நிலைக்கு ஏற்பவும் எமது சமூகத்தின் நலன் கருதியுமே இவ்வாறான முடிவை மேற்கொண்டோம்.

நான் அமைச்சை பொறுப்பேற்கும் போது, மிகவும் சந்தோஷத்துடன் பொறுப்பெடுத்தேன். இன்று அமைச்சர் பதவிலியிருந்து இராஜினாமா செய்கின்ற போதும், அதே சந்தோஷத்துடன் இருக்கின்றேன். நீங்கள் வழங்கிய அத்தனை ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி கூறுகின்றேன். அதுமாத்திரமின்றி உங்களின் ஒத்துழைப்பால் நட்டமடைந்திருந்த பெரும்பாலான நிறுவனங்களை இலாபகரமாக்க முடிந்தது. இந்த அமைச்சு ஒரு பாரிய அமைச்சு பல நிறுவனங்களை கொண்டுள்ள இந்த அமைச்சில் திட்டமிட்டு நாம் மேற்கொண்ட பணிகளும் திட்டங்களும் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் , சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி எனது கடமைகளை மேற்கொண்டிருக்கின்றேன் என்ற திருப்தியும், தலைவர்களையும் பணிப்பாளர்களையும் தெரிவுசெய்வதில் மூவினங்களுக்கும் இடமளித்துள்ளேன் என்ற நிம்மதியும் எனக்கு இருக்கின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(ஊடகப்பிரிவு)

Related posts

5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

Mohamed Dilsad

The train service between Ragama and Ja-ela will be suspended today

Mohamed Dilsad

Leave a Comment