(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்யும் வேலைத்திட்டங்களை முடக்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தான் முழுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று(22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் பெயரை பரிந்துரைத்தது தான் என கூறிய முன்னாள் பிரதமர், அதன்படியே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“… விசேடமாக ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை முடக்கியதாக மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டை நான் நிராகரிக்கின்றேன். அது என்னாலோ அல்லது இந்த வழிமுறையினூடாகவே இடம்பெறவில்லை். நாம் எமது பிரதான உறுப்பினர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கு மற்றும் அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்தோம்.
நான் வடக்கு கிழக்கு வாக்குகளை பொறுப்பேற்றேன். எனக்கு அந்த வாக்கு சதவீதத்தை அதிகரிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் துரதிஷ்டவசமாக மற்றைய மாகாணங்களில் எமது வாக்கு எண்ணிக்கை குறைந்தது. அது இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த கட்சிக்கு சிங்கள, பௌத்த வாக்குகள் கிடைக்கவில்லை. இதற்கு முன்னர் இது எமக்கு நடந்ததில்லை. அது தொடர்பில் நாம் விசேடமாக ஆராய வேண்டும். நாம் இது தொடர்பில் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி வெற்றிப் பெற முடியாது.
விடேசமாக கட்சிக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ நிதி நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித பொறுப்பும் இருக்கவில்லை. அதேபோல், நிதி நடவடிக்கைகளை நாம் பொறுப்பேற்க வில்லை. அந்த குற்றச்சாட்டையும் நான் நிராகரிக்கின்றேன். அதன் காரணமாக கட்சி தொடர்பில் இவ்வாறு குற்றம் சுமத்துபவர்கள் மீது, அது தொடர்பில் விசாரணை செய்து அது பொய்யானால் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். கட்சியின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு புதிய தலைவர்களை நாம் நியமிக்க உள்ளோம். அதேபோல் அவர்களுக்கு புதிய கொள்கைகளை முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அங்கு வெற்றியடையும் தலைமையொன்றை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
பௌத்தன் என்ற வகையில், ஏதாவது ஒரு தவறு இடம்பெற்றால் அது தொடர்பில் விரல் நீட்டாமல், அந்த தவறினை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான சரியான பௌத்த கொள்கையொன்றை நாம் புரிந்து கொண்டால்தான் நமக்கு முன்னோக்கி செல்ல முடியும்.
அதன் காரணமாக நாம் இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் சங்க நாயக்கர்களின் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டு புதிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில், முன்னோக்கி செல்வோம்..” என்றார்.