(UTV|COLOMBO) – ஹாங்காங்கில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சி இயக்கம் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
போராட்டத்துக்கு மத்தியில் ஹாங்காங்கில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட கவுன்சில் இடங்களுக்கு 1,090 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பேருந்து வழித்தடங்கள் மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற உள்ளூர் பிரச்சினைகளை கண்காணித்து தீர்வு காணும் அதிகாரம் மட்டுமே மாவட்ட கவுன்சிலர்களுக்கு உள்ளது.
ஆனால், கடந்த 6 மாதங்களாக ஹாங்காங்கில் நிலவிவரும் அமைதியின்மை மற்றும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அரசு கையாண்ட விதத்துக்கு மக்கள் சான்றிதழ் அளிக்கும் வாய்ப்பாகவே இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.
மொத்தம் உள்ள 18 மாவட்டங்களில் 17 மாவட்டங்களின் கவுன்சில்கள் ஜனநாயக ஆதரவு கவன்சிலர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
சீன அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் தோல்வியடைந்திருப்பதால், இது அந்த நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எனினும் தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக கேரி லாம் தெரிவித்துள்ளார்.