(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வற் வரியை மறுசீரமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
நேற்று(27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அமைவாக தற்பொழுது 15 சதவீதமான வற் வரி மற்றும் 2 சதவீதமான தேசத்தை கட்டியெழுப்பும் வரி அடங்கலாக 17 சதவீத மொத்த வரியை 8 சதவீதமாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு வரியை 25 சதவீதமாக குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்துக்காக விதிக்கப்படும் பண பரிமாற்றத்திற்கான வரியை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வீட்டு பொருட்கள் மற்றும் தயாரிப்புக்கள் தொடர்பில் விதிக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி, பொருளாதார சேவை கட்டணம் மீதான வரி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி, உழைக்கும் வருமானத்துக்காக செலுத்தும் வரி, வட்டி மீதான வரி, கடன் வரி ஆகிய வரிகளை உடனடியாக நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மேலும், கட்டிட நிர்மாணத்திற்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்த வருமானத்தின் அடிப்படையிலான வரி ஜனவரி 1ஆம் திகதியுடன் நீக்கப்படவுள்ளது. இது அடுத்த மாதம் டிசம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவை ஊடக பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன சற்று முன்னர் தெரிவித்தார்.
சமய தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பகின்றன. 1 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட வருமானத்துக்காக விதிக்கபட்டிருந்த வருமான வரி தற்பொது 25 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட வருமானத்திற்காக அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பங்குந்தை மீது அறவிடப்படும் சொத்து மீதான வருமான வரி விலக்கப்படுகின்றது.
சுங்க பகுதியில் அறவிடப்படும் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அறவிடப்படும் வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்திக்கான வரி ஆகியன ஒன்றிணைக்கபடுவதுடன் தேசிய பொருளாதாரத்துக்கான விகிதாசாரத்தை 10 சதவீதமாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பௌத்த, கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்காக விதிக்கப்படும் அனைத்து வரிகளும் நீக்கப்படுகின்றன.