(UTV|COLOMBO) – பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் அரிசி விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி தற்போது நெல் கொள்வனவு சபையால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் அனைத்தையும் அரிசியாக்கி லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கூடாக விற்பனை செய்வதற்கு அடுத்த வாரம் முதல் நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சு அறிவித்தது.
திறைசேரியின் செயலாளரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான எஸ்.ஆர் ஆட்டிகல மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பின் போதே பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
மாவட்டச் செயலாளர்கள் பெரும்போகத்தின் போது வாங்கிய நெல்லை முறைப்படி களஞ்சியப்படுத்தி வைத்துள்ளனர். இவற்றை தனியார் ஆலைகளுக்கு வழங்கி அரிசியாக்கிய பின்னர் விற்பனைக்காக லங்கா சதொசவுக்கு விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும்.
இதற்கமைய நுகர்வோர் ஆகக்குறைந்த சில்லறை விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியும். இதன் மூலம் லங்கா சதொசவுக்கு கிடைக்கும் பணம் பின்னர் மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.