(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி திறைசேரிமுறி விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையை அடுத்த கோப் குழு நியமிக்கப்படும்வரை கோப் குழு செயலகத்தில் இரகசிய ஆவணமாகப் பேணுவதற்கு கோப் குழுவின் முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தீர்மானித்துள்ளார்.
தடயவியல் கணக்காய்வு பற்றிய ஐந்து அறிக்கைகள் மத்திய வங்கியிடமிருந்து கிடைத்துள்ளன. அவற்றை கோப் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே பார்வையிட முடியும் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு மாத்திரம் இந்த அறிக்கைகளைப் பயன்படுத்த முடியும் என்றும் சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியிருப்பதால் இவற்றை இரகசிய ஆவணங்களாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய தடயவியல் கணக்காய்வு அறிக்கை பகிரக்கப்படுத்தப்படமாட்டாது என்பதுடன், இது மீண்டும் கோப் குழு நியமிக்கப்பட்ட பின்னர் அதன் உறுப்பினர்களின் அனுமதியுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு செயலகத்துக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற முறைமை தொடர்பில் தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக கோப் குழு இன்று (03) திகதி கூடவிருந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டமையால் குறித்த கூட்டம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.