(UTV|COLOMBO) – எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கையுடன் ஒன்றாக இணைந்து செயற்பட்ட நாடு பாகிஸ்தான் எனவும் எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று(04) UTV செய்திச் சேவையின் மூத்த ஊடகவியலாளர் ருஷ்டி நிசார் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. இலங்கையுடன் நாம் கொண்டுள்ள தொடர்பு மிக விஷேடமானது. ஏனென்றால் மிக கடினமான சந்தர்பங்களில் ஒன்றாக எழுந்து நின்றுள்ளோம்.
முக்கியமாக இலங்கை தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் போது பாகிஸ்தான் பாரிய பக்கபலமாக காணப்பட்ட நாடாகும்.
அந்த இக்கட்டான சந்தர்பத்தில் இலங்கையுடன் ஒன்றாக இருந்த ஒரே நாடு சிலவேளை பாகிஸ்தான் மட்டுமாக இருக்கலாம். இதனை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் சிறந்த ஒரு எதிர்காலம் உண்டு.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் சிறந்த வியாபார நடவடிக்கையொன்றை முன்னெடுக்க முடியுமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்..”
எவ்வாறான முதலீடுகளை இந்நாட்டில் முன்னெடுக்க உள்ளீர்கள்?
“.. இதுவரைக்கும் சீனி மற்றும் சிமந்து உற்பத்தி கைத்தொழிலுக்கு நாம் உதவி செய்துள்ளோம். இது தொடர்பிலும் ஏனைய கைத்தொழிற்துறைகள் குறித்தும் பாகிஸ்தானுக்கு அதிக அனுபவம் காணப்படுகின்றது.
இலங்கையிலுள்ள ஏனைய கைத்தொழிற்துறைகளுக்கும் உதவி செய்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்..” எனத் தெரிவித்திருந்தார்.