(UTV|COLOMBO) – ஆப்பிரிக்க நாட்டில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த 58 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் சீர்குலைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இவ்வாறு செல்கிறவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்.
இந்தநிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சுமார் 150 அகதிகளை படகு ஒன்றில் ஸ்பெயின் நோக்கி புறப்பட்டது. பல நாட்கள் இடைவிடாத பயணத்துக்கு பிறகு நேற்று முன்தினம் இந்த படகு மவுரித்தானியா நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 74 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் 18 பேர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.