(UTV|COLOMBO) – நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்கும் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று(13) இடம்பெற்றன.
மெய்வல்லுனர் போட்டிகளின் நான்காவது நாளான இன்று ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி, 39.14 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து, புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது.
தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அஞ்சலோட்ட அணியில் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா 100 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் ஹிமாஷ ஏஷான், ஆண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்ற வினோஜ் சுரன்ஜய ஆகிய இருவருடன், யுபுன் ப்ரியதர்ஷன, சானுக்க சந்தீப ஆகிய இருவரும் இடம்பிடித்திருந்தனர்.
இதேநேரம், ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் 39.97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி (40.5 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.
இதேவேளை, பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் லக்ஷிகா சுகன்தி தலைமையிலான இளம் பெண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. போட்டியை நிறைவுசெய்ய 44.89 செக்கன்களை எடுத்துக் கொண்டனர்.