(UTVNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 70 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 90 நலன்புரி முகாம்களில் 2 ஆயிரத்து 609 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 556 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 51 ஆயிரத்து 223 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 17 ஆயிரதது 62 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் ஆயிரத்து 486 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 27 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் 483 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் 330 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 291 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 61 குடும்பங்களை சேர்ந்த 242 பேரும், தென் மாகாணத்தில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 189 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கும் பணிகள் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)