(UTVNEWS | COLOMBO) – மியான்மர் நாட்டில் சிறுபான்மையின மக்களை இனப்படுகொலை செய்யும் நோக்கத்தில் மியான்மர் அரசு செயல்பட்டதில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற்சியில் இராணுவம் ஈடுபட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உயிருக்கு பயந்து சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த தூதர்கள் கடந்த 4 நாட்களாக இராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக வங்காளதேசம் நாட்டின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களை நேர்காணல் செய்தனர்.
இதற்கிடையில், மியான்மரில் முஸ்லிம் மக்களை முற்றிலுமாக அழித்துவிடும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டதாக மேற்காப்பிரிக்கா கண்டத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான காம்பியா அரசின் சார்பில் நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.