(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயம் ஆசிய மன்றத்துடன் இணைந்து ‘பெண்களின் உரிமையும் மற்றும் பெண்களின் தலைமைத்துவம்’ எனும் கருப்பொருளில் இலங்கையிலுள்ள பெண்கள் உரிமைகள் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
2019 , 2023 காலப்பகுதிக்கான உலகலாவிய விவகாரங்களுக்கான கனடா பிரிவு வழங்கும் 3 மில்லியன் கனடா டொலரை ஆசிய மன்றம் இலங்கையிலுள்ள பெண்கள் உரிமைகள் அமைப்புகளுக்கு வழங்கவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக் கினோன் மற்றும் ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான வதிவடப்பிரதிநிதி தினேஷா டி சில்வா விக்கிரமநாயக்க உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
இலங்கையின் சகல மாகாணங்களையும் சேர்ந்த 27 பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கடும் போட்டிக்கு மத்தியில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கனடா , இலங்கை உட்பட 32 திட்டங்களை உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆசியாவில் ஆப்கானிஸ்தான் , பங்களாதேஷ், இந்தோனேஷியா, மியன்மார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2019 – 2023 ஆகிய 5 வருட காலப்பகுதிக்கு கனடா 150 மில்லியன் கனடா டொலரை உலகலாவிய ரீதியில் வழங்கவுள்ளது.