(UTVNEWS | COLOMBO) –பாவங்களில் மூழ்கிக் கிடந்த மனித வர்க்கத்தை மீட்டெடுத்து மானிட சமூகம் கௌரவமாக வாழும் சூழலை உருவாக்க மனித குலத்தின் பிதா மகனான யேசுபிரான் உதித்த இன்றைய நத்தார் தினத்தில் நத்தாரைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துத் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் , உலக மக்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த இறை மகனாகவே இயேசுநாதர் திகழ்கிறார்.அன்பு, கருணை, இரக்கம் என்பன இறைமகனின் போதனையும் வழிகாட்டல்களுமாகும். யேசுபிரானின் முன்மாதிரிகள் மக்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்குகிறது. இந்த நத்தார் தினத்தில் சந்தோசமாக குடும்பங்கள் ஒன்று கூடுதல்,பரிசுப்பொருட்களைப் பரிமாறிக் கொள்ளல், விருந்துபசாரங்களை வழங்கி மகிழ்வித்தல்,நத்தார் தாத்தாவின் வருகைகைய எதிர்பார்த்து சிறுவர்கள் மகிழ்தல் என்பன நத்தாரின் சிறப்பு நிகழ்வுகளாகவுள்ளன.
வழமையாக மகிழ்ச்சியாகக் காணப்படும் கிறிஸ்தவர்களின் நத்தார் கொண்டாட்டங்கள் கடந்த வருடம் நடாத்தப்பட்ட ஈஸ்டர்தாக்குதல்களால் இம்முறை வேதனையுடன் கூடியதாகவே பார்க்கப்படுகிறது. அடிப்படைவாத சக்திகளுக்கு இடமளிக்காது தமது மத விழுமியங்களின் மரபில் வாழ்வதற்கும் மத உரிமைகளை அனுபவிப்பதற்கும் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும் என்ற செய்தியை நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு விடுக்கின்றேன். கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் பக்திபூர்வமான நத்தார் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.