(UTV|COLOMBO)- உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(27) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.
போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்த வேட்பாளரும் முகாம்களை அமைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு பிற பிரசாரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும். முகாம்களில் தின்பண்டங்கள் வினியோகம் செய்யவோ, மக்கள் கூடுவதையோ அனுமதிக்க வேண்டாம். வாக்காளர்களுக்கு எந்தவகையிலும் லஞ்சம் அல்லது பரிசு பொருட்கள் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும். வாக்காளர் தவிர, எந்தவொரு நபரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைதல் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
2-ம் கட்ட தேர்தல் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், வாக்கு எண்ணிக்கை 2 ஆம் திகதி நடைபெற இருக்கிறது.