Trending News

இந்திய அம்புலன்ஸ் சேவை இலங்கை முழுவதும் விரிவுபடுத்தப்படும் : மலையக மக்களுக்கு 10000 வீடுகள்- இந்திய பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – மலையக மக்களின் கல்வி, சமூக ,பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நோர்வூட் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பெரும் எண்ணிக்கையிலான மலையக மக்கள் இங்கு ஒன்று திரண்டிருந்தனர். டிக்கோயாவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வைத்தியசாலை வாட்டுத்தொகுதி உள்ளிட்டவற்றை மக்களிடம் கையளித்த பின்னர் உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,

தற்பொழுது மலையக மக்களுக்காக 4000 வீடுகளை கொண்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மக்களுக்கு இந்த வீட்டுக்கான காணி உறுதிகளை இலங்கை அரசாங்கம் வழங்குவதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த மக்களுக்கு மேலும் 10000வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்பொழுது இந்திய அம்புலன்ஸ் வாகன சேவை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்றுவருகின்றது. இதனை ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்தார்.

இன்று இந்திய விமானசேவை கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையிலான சேவையை ஆரம்பித்துள்ளது.

சிவபெருமானை வழிபடுவதற்கு இந்துமக்களான உங்களுக்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் உங்களுடன் இருக்கின்றார்கள். உங்களுடைய எதிர்காலத்திற்கு நாம் தற்போது உதவிகளை செய்கின்றோம். மேலும் செய்வோம் என்று குறிப்பிட்டார்.

உலக பிரசித்தி பெற்ற சிலோன் தேயிலை இங்கிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் உங்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகமக்கள் பெரிதும் விரும்பி பயன்படுத்துகின்ற சிலோன் ரீ என்ற பெருமை கொண்டுள்ளது. இதன்மூலம் 500 மில்லியன் அமெரிக்கடொலர்களை வருமானமாக பெறப்படுகின்றது.

உலகின் தேயிலை தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்களிப்பை இலங்கை வழங்கிவருகின்றது. உங்களது இந்த கடினமான உழைப்பை நான் பாராட்டுகின்றேன்.

ஆனால் இதனை சர்வதேசம் அறியாது. உங்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனக்கும் தேயிலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை அறிவீர்கள்.

தேநீர் அருந்தியவண்ணம் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் ஆழ்ந்த மகிழ்ச்சியை கொண்டது. உங்களது மூதாதையர் இந்தியாவில் இருந்து வந்தனர். வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டனர். அவர்களின் மனஉறுதிக்கு நான் தலைவணங்குகின்றேன். உங்களது தலைமுறையும் சவால்களை வென்று கஷ்டங்களை கடந்து வளர்ச்சியை நோக்கி முன்னேறவேண்டும் .

உங்களது எதிர்காலத்திற்கான அரும்பெரும் பணியாற்றிய மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானை நீங்கள் ஒருபோதும் மறக்க முடியாது. நாமும் அவரை மறக்கமாட்டோம். உங்களது எதிர்காலத்திற்காக பெரும்பணியாற்றியவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதன் பொருளை தமிழ் மக்களாகிய நீங்கள் அறிவீர்கள் ஒவ்வொரு ஊரும் உங்களது ஊரே இலங்கையும் உங்களது ஊரே என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்கள் அனைவரும் தமிழ்த்தாயின் புதல்வர்கள். உலகில்வாழும் பழமைவாய்ந்த மொழி தமிழ்மொழியாகும்.

அதனை பேசுகின்ற நீங்கள் அதோடு சிங்கள மொழியையும் பேசுகின்றீர்கள் . இது இந்த நாட்டின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. இந்தியாவில் கொண்டாடப்படும் கலாச்சார கொண்டாட்டங்களை நீங்களும் கொண்டாடுகின்றீர்கள்.

மொழியில் மாத்திரமன்றி காலாச்சாரத்திலும் நீங்கள் ஒன்றுபட்டுள்ளீர்கள்.

சமூகத்தின் பார்வை கொண்டாட்டங்களுக்கே வழிவகுக்கவேண்டும். அதை நோக்கியதாகவே உங்கள் செயற்பாடுகள் அமையவேண்டும் . எமது வரலாறும் சரித்திரத்துடன் தொடர்புபட்டதாகும்.கண்டியை ஆண்ட மன்னர்கள் தஞ்சாவூரில் பெண் கொடுத்து பெண் எடுத்தார்கள். இதுபோன்றே எம் இருதரப்பிற்குமிடையிலான நீண்டகால உறவு நிலைத்துநிற்கிறது.

இந்த ஒற்றுமையை நல்லிணக்கத்தை மேம்படுத்தவேண்டும் பிரித்தாளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான் மகாத்மா காந்தி பிறப்பிடமான குஜராத்தை சேர்ந்தவன் . மாகாத்மா காந்தி

கண்டி ஹற்றன் நுவரெலியா உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார். சமூக மக்களின் முன்னேற்றத்திற்கான பல விடயங்களை முன்வைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ரையும் நீங்கள் சார்ந்திருக்கும் மண்ணே உருவாக்கியது. இதே போன்றே இன்று உலகில் கிரிக்கெட் விளையாட்டில் பிரபல்யம் பெற்ற முத்தையா முரளிதரனையும் இந்த மண்ணே உருவாக்கியது. இது உங்களுக்கு மாத்திரம் அன்றி எங்களுக்கும் பெருமை சேர்க்கின்றது. புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களின் வெற்றி குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்தியாவும் மக்களும் உங்களது முன்னேற்றத்திற்காக எப்பொழுதும் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

1947ம் ஆண்டு இலங்கை தோட்டத் தொழிலாளர் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் உங்களது மேம்பாட்டுக்காக இந்தியா உதவி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் 700 புலமைப்பரிசில்களை நாம் வழங்கிவருகின்றோம்.

மேலும் தோட்டப்பாடசாலைகளில் விஞ்ஞான கூடங்களையும் ஆசிரியர் பயிற்சி கூடங்களையும் அமைத்துவருகின்றோம் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சிக்கு எச்சரிக்கை..!!

Mohamed Dilsad

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை

Mohamed Dilsad

உள்ளுராட்சி தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு தொடர்பில் பைசர் முஸ்தபா கருத்து

Mohamed Dilsad

Leave a Comment