Trending News

அரசாங்கத்தின் முறையான அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பு தேவை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அரசியல்வாதிகள் அபிவிருத்திக்கு பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று முற்பகல் காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முயற்சி எடுத்த போதிலும் சில அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக அந்த செயற்பாடுகள் தடைப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்..

நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடக நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி , நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக உதவித் திட்டங்களை அமுல்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

மக்கள் அதிக நாட்கள் முகாம்களில் தங்கியிருக்க முடியாது என்பதனால் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும், உதவிச் செயற்பாடுகளின் முன்னுரிமையை இனங்கண்டு செயற்படுமாறும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

வெள்ளம் வடிந்த பின்னர் கிணறுகளை துப்பரவு செய்வதற்கான நீர்ப்பம்பிகளை அரசாங்கத்தால் வழங்குமாறும், மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக இலவசமாக வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மக்களுக்குத் தேவையான உலர் உணவு உள்ளிட்ட பொருட்களை பகிர்ந்தளிக்கும் போது அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ளாமல், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அலுவலர்கள் ஊடாக அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மாவட்ட வீதிகள், பாடசாலை மற்றும் மருத்துவமனைகளில் விரைவாக மேற்கொள்ளக்கூடிய திருத்த வேலைகள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கும் செயற்பாடுகளை முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறினார்.

அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, நிஷாந்த முத்துஹெட்டிகம, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், காலி மாவட்ட செயலாளர் எஸ்.டி.கொடிகார உள்ளிட்ட அரச அலுவலர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related posts

Colombia anti-corruption referendum fails to meet quorum

Mohamed Dilsad

Death penalty can affect country’s tourism and investment prospects – Canadian HC

Mohamed Dilsad

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்கள் நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment