(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க, எமது சகோதர ஊடகமான ஹிருவின் ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அச்சுறுத்திய சம்பவத்துக்கு கூட்டு எதிர்க்கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
மிகவும் வெளிப்படையான முறையில் நல்லாட்சியை மீறிச் செயற்படும் இவர்போன்ற அமைச்சர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க எமது சகோதர ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, தாக்க முயற்சித்துள்ளார்.
வத்தளை – போபிட்டிய பிரதேசத்தில் உள்ள குப்பை பிரச்சினை தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
கந்தானை பிரதேசத்திலுள்ள அமைச்சரின் கட்சிக் காரியாலயத்தில், நேற்று முற்பகல், குப்பை விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பிரதேசவாசிகளும், ஊடகவியலாளர்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர், குப்பை விவகாரம் தொடர்பாக எமது சகோதர ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது, அமைச்சர் ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் தூற்றியதுடன், தாக்கவும் முயற்சித்தார்.