Trending News

இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

(UDHAYAM, COLOMBO) – இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இரணைதீவு மக்கள் தம்மைத் தமது பூர்வீக வாழ்விடத்தில் குடியேறி வாழ அனுமதிக்குமாறு கோரி   தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு மக்கள், பங்குத்தந்தை ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவுக்கு இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் வருமாறு,

”கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர்பிரிவில்; அமைந்துள்ள இரணைதீவு கிராம அலுவலர்பிரிவு1992ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைக் கடற்படையினால் கையகப்படுத்தியிருப்பதும் அதன் விளைவாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட 437 குடும்பங்களின் மீள்குடியேற்றம் இன்றுவரை நிகழாது இருப்பது தொடர்பில் தங்களின் விசேட கவனத்தை ஈர்க்க இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

இரணைதீவு மக்கள் கடந்த ஏழு வருடங்களாக தமது சொந்த இடத்தில் தம்மை மீளக்குடியேற்றுமாறு கோரிவந்ததுடன் அதற்கான கவனயீர்ப்பு போராட்;டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே தங்களின் உயர்வான கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதுடன் பாராளுமன்றத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறேன். குறித்த கிராம மக்களை மீளக்குடியமர்த்துமாறு கத்தோலிக்க மதகுருமார்கள்,  சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இரணைதீவு மக்கள் மீளக்குடியமர்த்த வேண்டும் எனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 2017.02.08ஆம் திகதி கௌரவ. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன ஆகியோருடன் பாராளுமன்றத்தில் கேள்வி நேர உரையாடல்கள் நடாத்தப்பட்டிருந்தது. 2017.05.05 ஆம் திகதி என்னால் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாங்கள் சம்பூரில் 2017.05.23ஆம் திகதி  நடைபெற்ற நிகழ்வொன்றில் ‘காணிகளையும் வீடுகளையும் பெற்றுக்கொண்ட மக்களே மீண்டும் ஒரு காணிக்காகப் போராடுகின்றார்கள்’ என உரை நிகழ்த்தியதாக வெளிவந்த செய்திகள் எம்மை அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றையும் வாழ்வியல் அடையாளங்களையும் உடையவர்கள் இரணைதீவு மக்கள். பாண்டிய இராச்சியத்தின் அரசவாரிசுகளான பரவர்களுடைய வழிவந்தவர்களாகவே இரணைதீவு மக்கள் விளங்குகின்றார்கள் என ‘பரவர் மொஹஞ்சதாரோ’ எனும் வரலாற்று நூல் விளக்குகின்றது. 1531இல் போர்த்துக்கேயர் காலத்தில் குருதீபம் எனப்படுகின்ற இரணைதீவில் முத்துக்குளிப்பு, சங்குக்குளிப்பு, அட்டைக்குளிப்பு,  ஆமைவலை, கடற்களான் வளர்ப்பு என தொழில் வளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். 1542 இல் புனித பிரான்சிஸ் சவேரியார் அவர்கள் கிராம மக்களுக்கு கத்தோலிக்கராக திருமுழுக்குச் செய்த போது இட்டபெயர்களான குருசு, பர்ணாந்து, நாகர், வாஸ், பூஞ்சே போன்ற பெயர்களை தங்களுடையதாக்கி இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வரலாறு. இரணைதீவு  கிறிஸ்தவ பங்கின் கீழ் 16ம் நூற்றாண்டில் புனித மேரி ஆலயம் இஙி;கு கட்டப்பட்டிருப்பதும் கல்முனை, இலு ப்பைக்கடவை, குழுழமுனை, கக்கடதீவு, பாலைதீவு, தேவன்பிட்டி, மூன்றாம் பிட்டி போன்றன இரணைதீவின் பங்காலேயே கட்டப்பட்டதும்  நிருபிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளாகும்.

1899 ம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்டஅரச வர்த்தமானி அறிவித்தலின்படி 1934ம் நவம்பர் 13ம் திகதி குறித்த தீவு கத்தோலிக்க திருச்சபைக்கும் அதன் பங்கு மக்களுக்கும்  வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் அம்மக்களின் பூர்விக வாழ்வுரிமை  நிலம் இரணைதீவு என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்களோ அங்கு மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதும் அவ்வாறு குடியேற்ற மறுக்கின்றமை ஐ.நாவின் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேதகு ஜனாதிபதி அவர்களே! இரணைதீவு  மக்கள் தங்கள் பூர்வீக இடங்களில் வாழ்வதற்காக கடந்த பன்னிரண்டு வாரங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஜெனீவாவில் தங்கள் அரசு மீள்குடியேற்றம் தொடர்பில்; வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எமது மக்கள் போராட வேண்டியிருப்பது துரதிஷ்டவசமானது. வெளியேற்றப்பட்ட மக்கள் இரணைமாதாநகரில் தங்களுடைய பிள்ளைகளுடன் இணைந்து வாழ்வதனை ஏற்கனவே அவர்கள் மீளக்குடியமர்ந்து விட்டாரக்கள் என அர்த்தப்படுத்தும் வகையில் தங்களுக்கு தகவல் அளிப்பது விசனத்தனமானது. நல்லிணக்கப்பொறிமுறைகளை நம்பிக்கையுடன் கட்டியெழுப்ப இரணைதீவுக்குடியேற்றம் முன்னுதாரணமாக திகழவேண்டும் என்பதே அம்மக்களின் விருப்பம். ஆகவே இவ்விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து யாழ்ப்பாண ஆயர், இரணைதீவு பங்குத்தந்தை அவர்களுடனும், அரச அதிகாரிகளுடனும் குறித்த மக்களுடனும் நேரடிக்கலந்துரையாடல்களை நிகழ்த்தி இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்துமாறும் அவர்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்துக்குத் தங்களின் நல்லாட்சியில் நீதி வழங்குமாறும் தயவுடன்  கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அதிவண. கலாநிதி ஜஸ்ரின்; ஞானப்பிரகாசம் ஆண்டகை, வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பூநகரிப் பிரதேசசெயலாளர், இரணைதீவு பங்குத்தந்தை அருட்செல்வன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

Related posts

CID obtains 9-hour long statement from Hemasiri

Mohamed Dilsad

Ikea India customer creeped out by caterpillar in food

Mohamed Dilsad

A/L results to be released before Dec. 30

Mohamed Dilsad

Leave a Comment