(UDHAYAM, COLOMBO) – வடமராட்சி கிழக்கு மணல் காடு பிரதேசத்தில் காவற்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் கொல்லப்பட்ட 24 வயதுடைய இளைஞனின் பிரேத பரிசோதனை, நேற்று மேற்கொள்ளப்பட்டதாக யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.மதுசன் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்று இரவு, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இளைஞனின் உடலம் அவரது வீட்டுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அத்துடன், இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லியடி மற்றும் மணற்காடு பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு மணல் காடு பிரதேசத்தில் உத்தரவை மீறி சென்ற பாரவூர்தி மீது, காவற்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 24 வயதுடைய இளைஞன், நேற்று முன்தினம் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு, குறித்த மணலை பாரவூர்தியில் ஏற்றி செல்லும் போது காவற்துறையினர் பிறப்பித்த உத்தரவை மீறி, குறித்த பாரவூர்தி பயணித்தமையை அடுத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறையினர் தெவித்தனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பதற்ற நிலை தொடர்;ந்து நீடிக்கின்றது.
நேற்றைய தினம், கலிகைச் சந்திக்கும் துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில், வீதியை மறித்து டயர்களுக்கு எரியூட்டி மக்கள், போக்குவரத்தைத் தடை செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக, பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து நேற்று தடைபட்டிருந்தது.
இந்நிலையில், பிரதேசத்தில் கலவரம் ஏற்பட்டு விடாமல் தடுக்கவும், அமைதி நிலையை ஏற்படுத்தவும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.