(UTV|BATTICALOA)-நல்லாட்சி அரசு மேற்கொள்ளும் சில நடவடிகைகளால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தேர்தல் மூலம் எத்திவைக்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
காத்தான்குடி நகரசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
முஸ்லிம்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசு சில விடயங்களில் நமது சமூகத்துக்கு நன்றிகெட்டதனமாக நடந்துகொள்கின்றது, என்ற செய்தியை வழங்குவதற்கான மக்கள் ஆணையாக இந்தத் தேர்தலைக் கருதி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என நாம் கோருகின்றோம்.
அரசியல் முறை மாற்றங்களிலும், தேர்தல் முறை மாற்றங்களிலும் அதன் மூலகர்த்தாக்கள் விட்டுக்கொடுப்பு இல்லாமல் நடந்துகொள்வதாகவே நாங்கள் உணர்கின்றோம்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் என்றுமே பிரிவினையை விரும்பியவர்களும் அல்லர். அதனை ஆதரித்தவர்களும் அல்லர். நாட்டுப் பிரிவினையை ஆதரிக்காத ஒரே காரணத்தினாலேயே வடமாகாணத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் துரத்தப்பட்டனர்.
ஞானசார தேரரால் ஆரம்பிக்கப்பட்டு, கொழுந்துவிட்டெரிந்த இனவாதத் தீ இந்த நல்லாட்சியுடன் அணைந்து விடும் என்ற நம்பிக்கையில், முழு முஸ்லிம் சமூகமும் புதிய அரசாங்கத்தை கொண்டுவந்தது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பௌத்த சம்மேளன தலைவராக இருக்கும் ஆனந்த சாகர தேரர் முஸ்லிம்களை இன்னும் துன்புறுத்தி வருகின்றார்.
சுமார் 30 ஆண்டுகால அகதிகளாக வாழும் வடமாகாண முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதற்கு தடை விதிக்கும் செயற்பாடுகளில், அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். வில்பத்துவை முஸ்லிம்கள் அழித்து குடியேறுவதாகவும், நான் அதற்குத் துணை போவதாகவும் கூறிவரும் ஆனந்த சாகர தேரரும், அவரைச் சார்ந்தோர்களும் பல வழக்குகளை எனக்கெதிராகத் தாக்கல் செய்துள்ளனர்.
நாங்கள் சமுதாய உணர்வுடன் செயற்படுவதனால்தான் எமக்கெதிரான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக் கட்சிகளோ, வேறெந்தக் கட்சிகளோ நமது சமூக ரீதியான விடயங்களில் அக்கறை செலுத்தமாட்டாது என்று உணர்ந்ததினால்தான் நாங்கள் மக்கள் காங்கிரஸின் மூலம், சமூகத்துக்கான உரிமைகளையும், தேவைகளையும் பெற பயணிக்கின்றோம். இந்தப் பயணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்த சமூக சிந்தனையாளர்களும் எம்முடன் இணைந்து பயணிக்கின்றனர் இவ்வாறு அமைச்சர் கூறினார்.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/01/MINISTER-RISHARD-@-KATHANKUDI-02-UTV-NEWS.jpg”]
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]