(UTV|SYRIA)-சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியில் அமுலாக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் மீறப்படுகின்றமைக்கு, ரஷ்யா மீதும் சிரிய அரசாங்கம் மீதும் ஐக்கிய அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
30 நாட்களுக்கு சிரியாவில் மோதல் தவிர்ப்பை உறுதிப்படுத்தி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆனால் இந்த தீர்மானத்தைக் கருத்திற்கொள்ளாமல் கிழக்கு கோட்டா பகுதியில் தொடர்ந்தும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்காவின் பிரதிநிதி, ரஷ்யா மற்றும் சிரிய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி முதல் சிரிய அரச படையினர் கிழக்கு கோட்டா பிரதேசத்தில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
சில இடங்களில் இரசாயனத் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான தாக்குதல்களால் இதுவரையில் 550க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிராந்தியத்தில் மோதல் தவிர்ப்பு அமுலாக்கப்பட்டுள்ள போதும், அரச படையினர் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்துகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி கெலி கரி தெரிவித்துள்ளார்.
புதன் கிழமை காலை வேளையிலும் அங்கு பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கிழக்கு கோட்டாவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோ, மருத்து மற்றும் நிவாரணப் பணிகளோ அங்கு நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இடங்களை நோக்கி, சிரிய அரச எதிர்ப்பு போராளிகள் தாக்குதல்களை நடத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற போதும், சிரிய போராளிகளின் தாக்குதல்களால் அதனை பேண முடியாதிருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான ரஷ்யாவின் தூதுவர் வெஸ்லி நெபென்சியா தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]