Trending News

இனவாதிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்வதால் அச்சத்தில் உறைந்துபோயுள்ள முஸ்லிம் மக்கள்..

(UTV|KANDY)-கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையிலும், இனவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமையினால், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எம்.பிக்களான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் விஜயம் செய்து களநிலவரங்களை அறிந்துகொண்டதோடு, தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

நேற்று (07) மாலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய குழுவினர், அந்தப் பிரதேசத்தில் களத்தில் நின்ற போதே, தொடர்ச்சியாக ஆங்காங்கே தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்தவண்ணமே இருந்தன.

பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அமைச்சர் ரிஷாட் உடனுக்குடன் விஜயம் செய்து, நிலைமைகளை அறிந்துகொண்டதுடன், பாதுகாப்புப் படையினரையும் உஷார் படுத்திக்கொண்டிருந்தார்.

கண்டி, கொஹாகோடை பிரதேசத்தில் நேற்றிரவு இரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டிருந்தன. ஹாரிஸ்பத்துவ, அங்குறதென்ன பிரதேசத்தில் இனவாதிகளின் தாக்குதலினால் சுமார் 10 வீடுகளும், பள்ளிவாசல் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக கேள்வியுற்ற அமைச்சர் அங்கு சென்ற போது, அந்த ஊர் பொதுமக்கள் பீதியின் காரணமாக, அந்த ஊர் பொதுமக்கள் சுமார் 100 பேர் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர்.

தமக்கான உணவினைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அமைச்சர் ரிஷாட் உள்ளிட்ட குழுவினரிடம் தெரிவித்தனர்.

உக்குரஸ்பிட்டிய மற்றும் அக்குரணை 04 ஆம் கட்டை ஆகிய பகுதிகளிலும் சேதமாக்கப் பட்டிருந்த முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை அமைச்சர் பார்வையிட்ட போது, அங்கு வாழ்ந்த மக்களையும் சந்தித்து நிலவரங்களையும் கேட்டறிந்தார்.

அம்பதென்ன, பூஜா பிட்டிய வீதியில் அமைந்துள்ள வெளேகட பகுதியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளுக்குத் தீ வைகப்பட்டுள்ளதாக அமைச்சருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட போது, அமைச்சர் குழாம் அங்கு விரைந்தனர்.

மர ஆலை ஒன்று தீச்சுவாலையுடன் அப்போது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. பிரதான வீதியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும்,  பெரும்பான்மையினர் வசிக்கும் அந்தக் கிராமத்தின் பின்புறமாக வந்து, முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளை குறிவைத்து, நாசகாரிகள் தீயை வைத்திருந்தனர். மர ஆலை ஒன்று எரிந்து முடிவடையும் தருணத்தில், பக்கத்தில் இருந்த மர ஆலைக்கு தீ பரவ தொடங்கியது.

அமைச்சர் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு சுமார் 08 கீ.மீ தூரத்தில் தீயணைப்புப் படையினரை வரவழைத்து, சுமார் ஒன்றரை மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.

பூஜாபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அங்கு விரைந்திருந்தார். சம்பவத்தைக் கேள்வியுற்று அமைச்சர் ஹலீமும் வருகை தந்திருந்தார்.

கண்டி மாவட்டத்தில் இரவு நேரங்களில் முஸ்லிம் கிராமங்களில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சமே தற்போது நிலவி வருகின்றது.

பெரிதும் பாதிக்கப்பட்ட திகன, பலகொல்ல, கட்டுகஸ்தோட்டை 04 ஆம் கட்டை, ஹாரிஸ்பத்துவ, அங்குறதென்ன, அம்பதென்ன, வத்தேகம, உக்குரஸ்பிட்டிய, கட்டுகஸ்தோட்டை போன்ற பிரதேச வாழ் முஸ்லிம் மக்கள், இன்னும் தமக்கு நேர்ந்த பாதிப்புக்களில் இருந்து முழுமையாக விடுபடவில்லை.

அதேபோன்று, அக்குரணை, மடவளை, உடத்தலவின்ன, இனிகல ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் சென்ற போது, அந்த மக்கள் வித்தியாசமான கருத்துக்களை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

“இனவாதிகள் எந்த நேரமும் எமது கிராமங்களை தாக்க வருவார்கள். எனினும், நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் மீது எங்களுக்குத் துளியளவும் நம்பிக்கை இல்லை. அவர்கள் எமது சொத்துக்களையோ, எம்மையோ பாதுகாக்கப் போவதுமில்லை. ஆகையால், எமது கிராமத்தின் எல்லைப் புறங்களில் மட்டும் அவர்கள் நின்றுகொள்ளட்டும். இனவாதிகள் அதையும் மீறி ஊடுருவினால் நாங்கள் எங்களைப் எப்படியாவது தற்காத்துக்கொள்வோம்”

அதேநேரம் நாப்பன்ன போன்ற சிங்கள கிராமங்களுக்கு அருகில் வாழும் மக்கள், தமக்கு படையினரின் பாதுகாப்பு தேவை எனவும், முக்கிய இடங்களில் படையினரை வரவழைத்துத் தருமாறும் அமைச்சரிடம் வேண்டினர்.

வேறுசில கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களோ, தாம் சிங்கள மக்களுடன் மிகவும் அந்நியோன்யமாக வாழ்வதால் தங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும், எங்களுடன் சேர்ந்து தாங்களும், இனவாதிகளை விரட்டி அடிப்போம் என்ற நம்பிக்கையை எமக்குத் தந்துள்ளனர் என்று கூறினர்.

மொத்தத்தில் கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் இரவு, பகல் என்று பாராது தமது உயிர்களை கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதையே காணமுடிந்தது.

கண்டி மாவட்டத்திலும், குருநாகல், குளியாப்பிட்டிய, வெலிகம, கெக்கிராவ, பூகொட ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களின் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் நடாத்தப்பட்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களால், இலங்கை வாழ் மக்கள் பெரிதும் கவலை கொண்டிருக்கின்றனர்.

சர்வதேசத்தின் கவனத்தையும் இந்த சம்பவங்கள் ஈர்த்துள்ள நிலையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கான தமது ஆதரவை வாபஸ் வாங்க வேண்டுமெனவும், முஸ்லிம் அமைச்சர்கள்  பதவி விலக வேண்டும் என்று ஒருசாரார் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை, இந்த சம்பவங்கள் இடம்பெற்ற நாள் தொடக்கம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் அழுத்தங்களை கொடுத்து வரும் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர், களத்தில் நின்று போராடி வருகின்றனர்.

பொலிஸ்மா அதிபருடனும், பாதுகாப்புப் படையினருடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு, பாதுகாப்பு தொய்வான பகுதிகளில் அவர்களை அமைச்சர்கள் உஷார்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஊரடங்குச் சட்ட வேளையிலும் நடைபெறுகின்ற கலவரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர களத்தில் நின்று, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/03/MINISTER-1-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/03/FB_IMG_1520498991120.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/03/FB_IMG_1520499000185.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/03/FB_IMG_1520499023891.jpg”]

 

-சுஐப் எம்.காசிம்-

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Presidential Election postal voting on Oct. 30 and 31

Mohamed Dilsad

It is revealed that 400 million litres of water goes waste daily

Mohamed Dilsad

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

Mohamed Dilsad

Leave a Comment