(UTV|COLOMBO)-இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை, அதேநேரம், நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் அமுலாக்கத்தில் காட்டுகின்ற தாமதத்துக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
இலங்கையில் மறுசீரமைப்பை விரிவாக்கல், பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு ஆகிய விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி உயர்ஸ்தானிகர் கேட் கில்மோர் நேற்று முன்வைத்தார்.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வில் வைத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இதன்போது, ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பில் வரவேற்கப்பட்டுள்ளது.
அத்துடன் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டத்திட்டங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்புக்கான தேசிய வேலைத்திட்டம் என்பவை குறித்தும் வரவேற்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறை அமுலாக்கத்தில் மிகப்பெரிய தாமதம் நிலவுகின்றமை வருத்தமளிக்கிறது.
இந்தவிடயத்தில் வினைத்திறனான பெறுபேறுகள் அல்லது சட்டத்திட்டங்களுக்கு வெளிப்படையான வரைவுகள் என்பன இல்லாமையானது, நீதிவழங்கல் வேலைத்திட்டங்களில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகிறது.
இதன்படி மனித உரிமைகள் பேரவையின் 30ன் கீழ் 1 பிரேரணை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது என்று உதவி உயர்ஸ்தானிகர் கேட் கில்மோர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், காணாமல் போனோர் அலுவலகத்துக்கான சட்டம் 20 மாதங்களுக்கு முன்னரே நிறைவேற்றப்பட்ட போதும், மிக அண்மையிலேயே அந்த அலுவலகம் உருவாக்கப்பட்டமையும் அதிருப்தியளிக்கிறது.
மேலும், காணி விடுவிப்பிலும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
காணி சுவீகரிப்புகள் தொடர்கின்றமை மற்றும் காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டயீடு வழங்கப்படாமை போன்ற காரணங்களால், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது.
அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்களை புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தவிடயம் பாரிய குற்றங்களை விசாரிப்பதற்கு, சர்வதேச நீதித்துறையினரின் ஒத்துழைப்புடன் விசேட நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படாத பட்சத்தில், மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் உட்படுத்தும் வகையிலான கோரிக்கை முன்வைக்கப்படும் என்றும் மனித உரிமைகள் பேரவையின் உதவி உயர்ஸ்தானிகர் கேட் கில்மோர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் தொடர்கின்ற சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், குரோத மற்றும் இனவன்முறை நிறைந்த கருத்துக்கள் போன்றவை குறித்தும் அதிருப்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]