(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் முதன்முறையாக லண்டனில் பிரம்மாண்டாமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார்.
ஜுன் 16, 17-ஆம் தேதிகளில் லண்டன் மற்றும் பாரீஸில் நடக்கும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து நடத்துகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
ஜுன் 16-ஆம் தேதியில் லண்டனில் உள்ள எஸ.எஸ்.இ. வெம்ளி அரேனா (S S E Wembly Arena) என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் பிரபல இணையதளங்களிலும் (டிக்கெட் மாஸ்டர்) இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
லண்டனில் முதன்முறையாக அனிருத் நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி ஜிக் ஸ்டைல் ஷோ (Gig Style Show) பாணியில் நடைபெறவிருக்கிறது. இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுதான் முதன்முறை. இது இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனிருத் ரசிகர்களையும், லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
அதனைத்தொடர்ந்து ஜுன் 17-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் செனித் (Zenith) என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு இங்கு எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அனிருத் தான் முதன்முறையாக இங்கு இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.
‘ஒய் திஸ் கொலவெறி…’ என்ற பாடல் மூலம் உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியிருக்கும் அனிருத்தின் இசையுலக பயணத்தில் இந்த இசைநிகழ்ச்சி வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இசையமைப்பாளர் அனிருத் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணையவிருக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா ’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
இந்த இசைநிகழ்ச்சியில் ஜெனிதா காந்தி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும், பாடகிகளும், இசை கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதைப் பற்றிய முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.’ என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]