(UDHAYAM, COLOMBO) – இலவசக் கல்வியைப் வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முன்னெடுத்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வருடாந்த பரிசரிளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
கல்லூரிக்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு மாணவர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, ஒரு நாட்டில் கற்றவர்கள் அதிகரிப்பதன் மூலம் அந்நாடு துரிதமாக அபிவிருத்தி அடையும் என்று கூறினார்.
பிள்ளைகளை புதிய தொழில்நுட்ப உலகுடன் இணைத்து எதிர்பார்க்கும் வெற்றியை நோக்கி அவர்களை வழிநடத்த தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பெருமைக்குரிய வரலாற்றுச் சிறப்புடன் 140ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் மேலும் பல கல்விமான்களை இக்கல்லூரி நாட்டுக்கு வழங்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் டெங்கு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக கல்லூரிக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, டெங்கு நோயை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு பாடசாலை பிள்ளைகள் முதல் அதனைத்து பிரஜைகளினதும் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குத் தேவை எனக் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் குறித்து இன்று சிலர் பல்வேறு விடயங்களை முன்வைக்கின்ற போதும் டெங்கு நுளம்புகளை ஒழிப்பது இன்று உலகிற்கு சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பூகோள வெப்பமயமாதலுடன் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் உருவாகும் டெங்கு நுளம்பு காரணமாக உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளும் பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பாடசாலை அதிபர் ஏ.ஜே.பெர்ணாந்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.