(UDHAYAM, COLOMBO) – காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 3ம் தரத்தில் கல்வி கற்கும் ரி. ஸம்றி அஹமட் எனும் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார்.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி வகுப்பாசிரியரான சேகுதாவூத் ரஸீட் என்பவர் பாடசாலை வகுப்பறையில் வைத்து தாக்கியதில் இந்த மாணவன் காயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்சமயம் வரை அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாணவனைத் தாக்கிய குற்றச் சாட்டின் பேரில் குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிஸார் தேடி வந்த நிலையில் அவ்வாசிரியர் திங்கட்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இவரை பொலிஸார் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
மாணவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம். றிஸ்வி இம் மாணவன் தாக்கப்பட்டு காயங்களுக்கான புகைப்படங்களையும் நீதிவானிடம் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.