Trending News

துபாயில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

(UTV|DUBAI)-துபாயின் மரினா பகுதியில் ஜென் டவர் என்ற 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் தரைத் தளத்தில் ஓட்டல்கள், கிளினிக் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

இந்த கட்டிடத்தில் ஆசிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளின் உள்ளே 3 முதல் 5 படுக்கையறை கொண்ட வீடுகள் உள்ளது. நேற்று காலை சுமார் 10 மணியளவில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குடியிருப்பில் திடீரென்று தீப்பிடித்தது.

ஏற்கனவே அந்த பகுதியில் அதிவேகத்துடன் புழுதிக்காற்று வீசிக்கொண்டிருந்தது. இதன் காரணமாக கட்டிடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்போது புகை அதிகமாக வெளிவந்ததால் அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த புகை உணரும் கருவியில் அலாரம் ஒலித்தது.

இதனால் விபரீதத்தை உணர்ந்த குடியிருப்பில் வசித்தவர்கள் தீயில் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அதில் வசித்து வந்தவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு உயிர்பிழைத்தால் போதும் என அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

ஆனால் கீழ் தளங்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் மேல் தளங்களில் வசித்து வந்தவர்கள் கீழே இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தங்களை காப்பாற்றுமாறு மரண ஓலமிட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சில நிமிடங்களில் ஜென் டவர் கட்டிடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறை வீரர்கள் கவச உடைகளை அணிந்து கட்டிடத்திற்குள் சென்றனர்.

முதற்கட்டமாக அந்த கட்டிடத்தின் உள்ளே புகையால் மூச்சு திணறி உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து கட்டிடத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் உயரமான பகுதியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை 45 நிமிடங்கள் கடுமையாக போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவசர உதவிக்கான வாகனங்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை பொது இயக்குனர் ராஷித் தாணி அல் மட்ரூஷி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இந்த தீவிபத்து காரணமாக ஷேக் ஜாயித் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயங்கர தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் 5 மாடிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 10 மாடிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.

அந்த குடியிருப்பில் வசித்தவர்களை துபாய் போலீசார் சிறப்பு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டு, துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி பகுதியில் உள்ள கயா கிராண்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும்.

வாரத்தின் முதல் நாள் என்பதால் அந்த கட்டிடத்தில் வசித்தவர்களில் பலர் அலுவலகங்களுக்கு சென்று விட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

(மாலை மலர் )

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mohamed Dilsad

Melissa McCarthy to star in “Margie Claus”

Mohamed Dilsad

No liquor licenses issued to current Parliamentarians – Finance Ministry

Mohamed Dilsad

Leave a Comment