Trending News

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

(UTV|COLOMBO)-நாட்டின் துறைசார் நிபுணர்களையும் பாராளுமன்றத்துக்குள் உள்ளீர்க்கும் தேசியப்பட்டியல் திட்டம் இன்று பலரையும் தொற்று நோய்க்குள்ளாக்கியுள்ளது. இப்பட்டியலுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எட்டாப்பொருத்தம். முன்னாள் ஜனாதிபதி ஜேஆரின் இத்திட்டம் அமுலான 1978 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற ஏழு தேர்தல்களில் (1989, 1994, 2000, 2002, 2004, 2010, 2015) இந்தத் தேசியப் பட்டியலுக்காக அதிகம் முண்டியடித்ததும், முரண்பட்டதும் முஸ்லிம் கட்சிகளே. முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தலில் (1989) கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியலும் பல பிரயத்தனங்களின் பின்னரே புஹார்தீன் ஹாஜியாருக்கு வழங்கப்பட்டது. கட்சியின் இரண்டாம் தலைவரான ஷேகு இஸ்ஸதீனுக்கு இப்பட்டியலை வழங்க அஷ்ரப் எடுத்த முயற்சிகள் கடைசியில் பட்டுப்போனது. கட்சியின் சரித்திரத்தில் தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற தேசியப் பட்டியலும் இதுவாகவே பதியப்பட்டது.

இதற்குப்பின்னரான தேர்தல்களில் மு.காவின் தனித்துவம் இழக்கப்பட்டுக் கூட்டணிகளுடன் கை கோர்த்ததும் இந்தத் தேசியப் பட்டியலுக்கே. 1994 பொதுத் தேர்தலில் கிடைத்த பட்டியலில் ரவூப்ஹக்கீமும், எம்.எம்.ஸுஹைரும், அசித்த பெரேராவும் பத்திரமாகப் பாராளுமன்றத்தைப் பற்றிக்கொண்டனர். இவ்விரு தேர்தல்களிலும் தேசியப்பட்டியல் முஸ்லிம் காங்கிரஸுக்கு தலையிடியாகப்பட்டதில்லை. பட்டிருப்பினும் அஷ்ரபின் ஆளுமைக்குள் அது பட்டுப்போயிருக்கும்.

ஆனால், இப்போதுள்ள முஸ்லிம் தலைமைகளுக்கோ இப்பட்டியல் ஒரு கழுத்துப்பட்டி, நெருப்புச்சட்டி. வேட்பாளர்களுக்கோ ஒரு பிச்சைப்பெட்டி. மட்டுமல்ல இடுப்புப்பட்டியும் இதுவே. கட்சிகளின் புத்திஜீவிகள் பலரை தலைமைகள் விரும்பாமலும் வெளியேற்றியது இப்பட்டியல். அரசியல் தலைமைகள் பலவற்றுக்கும் துரோகமிழைத்ததும் இப்பட்டியலே.

ஷேகு இஸ்ஸதீனின் ஆளுமையைப் புடம் போட்டதும், இப்பட்டியல்தான். அஸ்வரின் ஆளுமை அகப்பட்டதும் இப்பட்டியலிலே. ஹசனலி ஏமாந்தது?, பஷீர் ஷேகுதாவூத் எதிர்பார்த்தது?, வை.எல்.எஸ் விரக்தியுற்றது?. இவ்வாறெல்லாம் பலருக்கும் பல ஆதங்கம் இந்தப் பட்டியலால். பட்டிதொட்டி எல்லாம் தற்போது பேசப்படுவதும் இப்பட்டியலைத்தான். வாக்குகளை வசீகரிக்க தலைமைகள் வாய்திறந்து வரிசைப்படுத்துவதும் இப்பட்டியலைத்தான்.

தேர்தல் காலத்தில் பலரும் எம்.பியாகக் கனவில் சஞ்சரிப்பதும் இப்பட்டியலால்தான். கூவி விற்றாலும் இத்தேசியப் பட்டியலின் விலை இறங்குவதில்லை. பதுக்கி வைத்தாலும் இப்பட்டியலின் பெறுமதி குறைவதில்லை. ஊருக்கு ஊர் இப்பட்டியல் வியாதி பரவினாலும் பாமரனைத் தொற்றுவதில்லை. மேடையில் வீற்றிருக்கும் வேட்பாளனையே இவ்வியாதி பற்றிக்கொள்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பட்டியல் தற்போது எல்லோருக்கும் எறிகணை. கட்சியைக் காப்போருக்கும், வீழ்த்துவோருக்கும் விலையில்லாத ஆயுதம் இப்பட்டியல். ஆனால், கட்சித்தலைமைக்கு மட்டும் இதுவோ இரகசியப்பட்டியல். இறுதியில் யார் தலையில் விழுமோ இந்த அதிர்ஷ்டப் பட்டியல்????

 

-சுஐப் எம்.காசிம்-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Star Wars producer Gary Kurtz passes away at 78

Mohamed Dilsad

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21)…

Mohamed Dilsad

“England have earned respect” – De Villiers

Mohamed Dilsad

Leave a Comment