(UDHAYAM, CHENNAI) – தமிழகம் – அலங்காநல்லூரில் இடம்பெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை பெறுமதியான மோட்டார் வானகத்தை பரிசாக வென்றுள்ளது.
திருச்சியில் வளர்க்கப்படும் ஊவாக மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளைகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.
இப்போது ஊவாக மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானுக்குச் சொந்தமான 9 காளைகள் திருச்சி மிளகுப்பாறையில் அவரது உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு மாடு இனங்களான காங்கேயம், புலிசாரை, செந்தாரை, மயிலக்காளை மற்றும் சீமைக் காளை என 9 காளைகள் இருக்கின்றன.
இவற்றில் 5 காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.
பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தவறாமல் இவரது காளைகள் பரிசுகளை வென்றுள்ளன.
இதற்கு முன்பு மெகா பரிசாக, தேனி மாவட்டத்தில் 2014-இல் நடந்த ஜல்லிக்கட்டில் மோட்டார் சைக்கிள் வென்றுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக மாருதி கார் மட்டுமின்றி, நாட்டு பசுமாடு, ஒரு பவுன் தங்க நாணயம், கைதொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை இவரது காளைகள் வென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக குளிர்சாதன வசதி கொண்ட சிறப்பு வாகனத்தில் இந்த காளைகள் கொண்டு வரப்பட்டன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தமிழக செய்தியாளர்களிடம் கூறியது: “இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரியமாக எங்களது குடும்பத்தினர் காளைகள் வளர்த்து வருகின்றனர்.
அதோடு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்று வந்துள்ளனர்.
அந்த வகையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளேன்.
உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகள் தொடர வேண்டும்” என்றார்.