(UDHAYAM, COLOMBO) – வடமேல் மாகாணத்துக்கு நீரை வழங்கும் வாய்க்கால் திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
மீ ஓயா மேல் நீரேந்து பிரதேசம் மற்றும் ஹக்வட்டுன ஓயா நீர்த்தேக்கத்தக்கு மகாவலி நீரை திருப்பி குருணாகல் மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திலுள்ள பல குளங்களுக்கு நீரை வழங்கி விவசாயத்தை அதிகரிப்பதற்கும், நீர்ப்பற்றாக்குறை பாதிப்புகளை குறைக்கும் நோக்குடன் வடமேல்மாகாண வாய்க்கால் திட்டம் மகாவலி நீர் பாதுகாப்ப முதலீட்டு செயற்திட்டமாக அமுல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் நிறைவடைந்தபின்னர் 105,000 ஏக்கர் கன அடி மகாவலி நீரை குருநாகல் மாவட்டத்தின் வடபகுதிக்கு பெறக்கூடியதாக இருக்கும்.
பிரதேசத்திலுள்ள 300 சிறு குளங்கள், 08 பிரதான குளங்கள் மகாவலி நீரினால் போசிக்கப்படுவதுடன், ஹக்வட்டுன ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் 3500 ஹெக்ரேயர் உள்ளிட்ட 12,000 ஹெக்ரேயருக்கு அதிகமான பகுதிகளுக்கு இருபோகங்களிலும் நீரை பெற முடியும்.
இந்த திட்டத்துக்காக 16000 மில்லியன் ரூபா செலவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதேசத்தில் தற்போது நிலவும் சிறுநீரக நோய்க்கு காரணமான கடுமையான குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைப்பதுடன் நிர்மாணம் காரணமாக பல நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.