(UDHAYAM, COLOMBO) – தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் பிணை கோரிய மனுவிற்கு எதிர்ப்பு இருப்பின் அதனை எதிர்வரும் 27ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
விமல் வீரவங்சவிற்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இது தொடர்பில் முன்னர் இடம்பெற்ற விசாரணையின் போது நிதிமோசடி விசாரணை பிரிவு உட்பட 6 பிரதிவாதிகளுக்கு இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவங்ச தொடர்ந்தும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இதன் போது உத்தரவிட்டது.