Trending News

கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்

(UTV|COLOMBO)-கப்பல் கட்டுமானப் பணிகள் மற்றும் கப்பல் துறைசார் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் ஒப்பிடும்போது, இலங்கை குறைந்தளவிலான விகிதாசாரத்தில் ஈடுபடுகின்ற போதும், இந்தத் துறையில் இலங்கையின் ஏற்றுமதியானது தொடர்ச்சியாக வலுவான எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும், அதன் விளைவாக 2022 ஆம் ஆண்டில் படகு மட்டும் கப்பல் துறைசார் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 200 மில்லியன் டொலரை ஈட்டக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் காலியில் இடம்பெறும் கப்பல் மட்டும் படகுகளின் கண்காட்சி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சர்வதேச ஏற்றுமதி  மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, உல்லாச பயணத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் இந்திரா மல்வத்த, படகுக் கட்டுமான தொழில்நுட்ப விருத்தி நிலையத்தின் தலைவர் நீல் பெர்னாண்டோ ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கூறியதாவது,

“உலகின் பொருளாதார நெருக்கடி மற்றும் அழுத்தங்களினால் உலகளாவிய ரீதியிலான கப்பல் மற்றும் படகு கட்டுமான தொழிற்துறை சரிவடைந்து வருகின்றது. எனினும், இலங்கைப் படகுக் கட்டுமான உற்பத்தியாளர்கள் மற்றும் கப்பல்துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் காட்டும் அக்கறையினால், நமது ஏற்றுமதி வருமானம் அதிகரித்து வருவதுடன், நெகிழ்வுப் போக்கையே காட்டி வருகின்றன.

முதன்முறையாக காலியில் இடம்பெறவுள்ள கப்பல் மற்றும் கடல்சார் பொருள் கண்காட்சி, நாட்டின் கடல் வழியான உல்லாசபயணத் துறையை விருத்தி செய்வதற்கும், படகு மற்றும் தோணிகள் கட்டுமானப் பணிகளை மேம்படுத்தி இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் உதவுமென நம்புகின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கான மூலோபாயத்தை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, ஜெனீவாவில் இயங்கும் சர்வதேச வர்த்தக அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டு வருவதை இங்கு நான் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் படகு தொழிற்சாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தேவைகளை முன்னேற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

படகு மட்டும் கப்பல் துறை ஏற்றுமதி வருமானத்தில் இலங்கையின் வளர்ச்சியானது படிப்படியான அதிகரிப்பையே காட்டுகின்றது. 2016 ஆம் ஆண்டு 65 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தைக் கொண்ட இலங்கை, 2017 ஆம் ஆண்டு 97 மில்லியன் டொலரை ஈட்டியதுடன் 50% சதவிகித அதிகரிப்பைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன் பல்வேறு இலங்கை கம்பனிகள், கப்பல் மற்றும் படகு தயாரிப்புக்களில் ஈடுபடுவதுடன், 11 அடையாளப்படுத்தப்பட்ட கம்பனிகள் ஏற்றுமதியிலும் ஈடுபடுகின்றன. இந்தத் துறையில் ஈடுபாடு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கம்பனிகளுக்கு நன்றி கூறுவதோடு, தொடர்ந்தும் இந்தத் துறையை விருத்தி செய்ய உதவுமாறும் வேண்டுகின்றேன்” என்றார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பஸ் மீது பெற்றோல் குண்டு வீச்சு

Mohamed Dilsad

Canadian family with Sri Lankan links escape jeep fire

Mohamed Dilsad

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

Mohamed Dilsad

Leave a Comment