Trending News

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|AMPARA)-நமது சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுந்துள்ள சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அம்பாறை, மாவடிப்பள்ளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் தலைமையில், நேற்று  காலை (08) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குறுகிய காலத்தில் அந்தக் கட்சி நேர்மையாகவும், இதயசுத்தியுடனும் மக்கள் பணிகளை முன்னெடுத்ததன் பிரதிபலிப்பாகவே, அக்கட்சிக்குக் கிடைத்துள்ள பாராளுமன்றப் பிரதிநிதிகளும், மாகாண சபை உறுப்பினர்களும், நாடளாவிய ரீதியிலான பல உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும், பல சபைகளின் உள்ளூராட்சி அதிகாரங்களும் அமைந்திருகின்றன.

தேர்தல் காலங்களில் மக்களின் உணர்வுகளைத் தூண்டி, கோஷங்களை எழுப்பி அதிகாரங்களைப் பெறுவதற்காக மக்களின் உள்ளங்களை வெல்லும் அரசியல் தந்திரோபாயம், அம்பாறை மாவட்டத்தில் இனியும் பலிக்காது என்பதை, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாம் கண்டுகொண்டோம்.

இந்த மாவட்ட மக்களின் வாக்குகளைச் சூறையாடி, அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும் அதிகாரத்தில் இருந்தவர்கள், இந்தப் பிரதேசத்துக்கு இதுவரை காலமும் குறிப்பிடத்தக்க எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தப் பிரதேசத்துக்கு வந்து அரசியல் செய்யப் புறப்பட்டபோதுதான் இவர்கள் விழித்தெழுந்தனர். எங்களை முந்திக்கொண்டு ஏதாவது செய்துவிட வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டது.

நமது சமூகத்தின் பாதுகாப்பு, எதிர்கால அபிவிருத்தி, இருப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு மக்கள் காங்கிரஸ் முன்னெடுத்து வரும் பயணத்துக்கு உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பும், உதவியும் நல்கினால் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். அத்துடன், கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் மீண்டும் இழைக்காமல் தூரநோக்குடனும், சமூகத்தின் நன்மை கருதியும் எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது இந்தப் பிரதேசத்துக்கு மாத்திரமன்றி, முழுச்சமூகத்துக்கும் பயன்கிடைக்குமென நான் திடமாக நம்புகின்றேன்.

சமூக அபிவிருத்தியைக் கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, சமூகம் சார்ந்த உரிமைகளைப் போராடி வெற்றிபெற வேண்டிய நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டிருக்கின்றோம். அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், தீர்வு முயற்சிகளில் நாங்கள் இனியும் கிள்ளுக்கீரைகளாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு, சமூக ஒற்றுமையே பலமான ஆயுதமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஸ்மாயில், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலிப் பிரதேச சபை தவிசாளர் சுபியான் மற்றும் பிரதித் தவிசாளர் முஹுசீன் ரைசுதீன், கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, முன்னாள் நீதிபதியும், கூட்டுறவு ஊழியர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி கபூர் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Four new envoys present credentials to President

Mohamed Dilsad

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

Mohamed Dilsad

UPDATE-பாராளுமன்றம் கூடியது – இடைக்கால கணக்கு அறிக்கை சமர்பிப்பு

Mohamed Dilsad

Leave a Comment