(UDHAYAM, COLOMBO) – பிரதேச மட்டத்தில் இருக்கின்ற அதிகாரிகள் சிலர் மதுபோதையில் செயற்படுகின்ற காரணத்தால் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக பாடுபடுகின்ற அதிகாரிகளுடைய முயற்சியும் வீணடிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாடசாலைகளின் முறையில் கல்வித்தரச் செயற்பாடுகளின் உறுதிப்பாடு தொடர்பான வருடாந்த சம்மேளனம் இன்று காலை பத்தரமுலலையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் வலய மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதன்போது உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர், மாகாண கல்வி அமைச்சும் அங்கிருக்கின்ற அதிகாரிகளும் உரிய முறையில் கல்வி தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இல்லையேல், கல்வி அமைச்சு எத்தனை முயற்சிகளை செய்து கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சி செய்தாலும் அது சாத்தியமாகாது என குறிப்பிட்டார்.
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமானால் கட்டாயமாக கல்வி அதிகாரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.
அதன் மூலமாக அதிபர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.
பின்பு ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.
அதன் மூலமாகத்தான் மாணவர்களுக்கு தரமான ஒரு கல்வியை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.