(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்ளாய் மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மெக்கோலைன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராயும்பொருட்டு நேற்று யாழ்ப்பாணம் சென்ற அவர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்பு விடயத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பு உள்ளடங்கப்படுகின்றனவா? என்பது குறித்து முதலமைச்சரிடம் குறித்த குழுவினர் கேட்டறிந்தனர்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படவுள்ள வாழ்வாதார உதவித்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.