சிங்கள வானொலியில் மனோ கணேசன்
(UDHAYAM, COLOMBO) – ஹம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போகிறது என்ற வெறும் வதந்திக்கே தெருவுக்கு வந்து, பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், வடக்கில் கேப்பபிளவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வரும் அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்களை பற்றி கேட்டு அறிய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
நேற்று இரவு 7.30 மணியிலிருந்து 9 மணிவரை நடைபெற்ற பிரபல தனியார் வானொலியின் சிங்கள மொழியிலான நேரடி ஒலிபரப்பில் கலந்துக்கொண்ட தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மக்களின் மனித உரிமை கோரிக்கைகள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு தெரிவிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு நிகழ்ச்சி நடத்துனரிடம் கூறிவிட்டு, கேப்பபிளவு விவகாரம் தொடர்பில் தொடர்ந்து சிங்கள மொழியில் பேசிய போது மேலும் கூறியதாவது,
ஹம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணி சுவீகாரம் என்ற வெறும் வதந்திதான் பரவியது. அதற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் மக்களை அணி திரட்டினார்கள். மக்களும் பல்லாயிரக்கணக்கில் தெருவுக்கு வந்தார்கள். பெளத்த குருமார் தலைமை தாங்கினார்கள். இளைஞர்கள் போலீசாருடன் மோதினார்கள். அரசு சொத்துக்கு சேதம் ஏற்பட்டது. இன்னமும் பலர் சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். ஆனால், அங்கே காணி சுவீகரிப்பு என்ற விடயம் முடிவுக்கு வந்து விட்டது.
கேப்பபிளவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்கள் குழுவினர், கடந்த கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் அமைதி போராட்டமாக இருக்கிறது. குழந்தைகளும், தாய்மார்களும் அங்கேயே வெயிலிலும், மழையிலும், பனியிலும் அமைதியாக அமர்ந்து, தூங்கி, எழுந்து, தொடர்ந்து போராடுகிறார்கள். இந்த மக்களை பற்றி சிங்கள மக்கள் பற்றி கேட்டு அறிய வேண்டும். தங்கள் சொந்த இடங்களை கேட்டு அப்பாவி தமிழ் மக்கள் நடத்தும் இந்த அமைதி போராட்டம், தேசிய, சர்வதேசிய காதுகளை இன்னமும் எட்ட வேண்டும். ஆகவே, இன்னமும் ஓரிரு நாட்களில் நான் அங்கு செல்ல உள்ளேன். அங்கே போவதை முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் போகிறேன்.