(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னரான படுகொலை வழக்கு விசாரணையின் சந்தேகநபர்கள் பன்னிரெண்டு பேரினது விளக்கமறியலை மேலும் நீடித்து ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகளினூடாக பன்னிரெண்டு சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர்.
இதன்படி இம் மாணவி படுகொலை செய்யப்பட்டு இரண்டு வருடங்களாகும் நிலையில் இன்னமும் குறித்த மாணவியின் கொலை சந்தேக நபர்கள் மீதான குற்றப்பத்திரம் இதுவரை தாக்கல் செய்யப்பட்டவில்லை.
இவ்வாறான நிலையில் குறித்த பன்னிரெண்டு சந்தேகநபர்களில் முதல் பத்து பேரினது நீதிவான் நீதிமன்ற விளக்கமறியல் காலமும் ஒருவருடத்தை கடந்துவிட்ட நிலையில் அதனை தாண்டியும் மேலும் ஒரு வருடம் நீதிவான் நீதிமன்றில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் பகுதி பகுதியாக அனுமதியும் வழங்கியிருந்தது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த வழக்கானது, ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த பன்னிரெண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.